வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாக மீளாய்வு செய்து, திட்டங்களை உரிய காலத்துக்குள் நிறைவு செய்வதுடன், நிரல் அமைச்சுக்களால் வழங்கப்படும் மேலதிக நிதியை வினைத்திறனுடன் பயன்படுத்தவும், தொழில்நுட்ப ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட நடைமுறைச் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாண ஆளுநருக்கும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (01.09.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாகாண சபையால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான அறிக்கையைத் தயாரித்தல், இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் அவற்றை உரிய காலத்துக்குள் நிறைவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், நிரல் அமைச்சுக்களினால் மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் மேலதிக நிதியை உரிய நோக்கத்திற்காகவும் வினைத்திறனுடனும் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் தொழில்நுட்ப ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட மனிதவள மற்றும் நடைமுறைச் சவால்களை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தேவையான தீர்வுகளை விரைவாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இதன்போது, பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடலின் கீழ் பணியாற்றும் கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவை நிலையங்கள் மற்றும் அவர்களின் பணிகளை மேலும் ஒழுங்குபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கள மட்டத்தில் அபிவிருத்திச் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் திட்டங்களின் கண்காணிப்பு மற்றும் நடைமுறைப்படுத்தலை மேம்படுத்துவதற்கும் தேவையான ஏற்பாடுகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



