வடக்கு மாகாண மட்ட ஆங்கில தின போட்டியில் வெற்றி பெற்ற தென்மராட்சி கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான கௌரவிப்பு இன்று (24.10.2024) தென்மராட்சி கல்வி வலயத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கலந்து கொண்டார்.
தென்மராட்சி கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் திரு.கிறிஸ்தோபர் கமலராஜன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் தென்மராட்சி கல்வி வலயத்தின் கல்வி சார்ந்த அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்குவதற்கு கற்றல் செயற்பாடுகள் முன்னிலை வகிக்கின்றன. மாணவர்கள் மென்மேலும் பல சாதனைகளை புரிந்து எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளாக திகழ வேண்டும் என வாழ்த்தினார்.
தென்மராட்சி கல்வி வலயத்திலிருந்து மாகாண மட்ட ஆங்கில தின போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் தேசிய மட்டத்தில் இடம்பெறும் ஆங்கில தின போட்டியில் வெற்றி பெறுவதற்கு கௌரவ ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


