கிளிநொச்சி மாவட்டத்தின் பளை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் மாதிரி கிராம வீட்டுத் தோட்டச் செய்கை வயல் விழா நிகழ்வானது 11.09.2025 அன்று காலை 10.00 மணியளவில் விவசாய போதனாசிரியர் திருமதி ரா.மாதுமை தலைமையில் வண்ணான்கேணி, தம்பகாமம் பளை எனும் இடத்தில் நீதிராசா கிருஜனா எனும் விவசாயியின் வீட்டுத் தோட்ட வளாகத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சோ.விஜயதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மற்றும் கமநலசேவை திணைக்கள கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், தம்பகாமம் பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர் அவர்களும் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் , விவசாயிகள், மற்றும் சமூக நலன் விரும்பிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பிரதி விவசாயப் பணிப்பாளர் அவர்கள் 2026 ஆம் ஆண்டுக்குரிய திட்டங்கள் பற்றியும் வீட்டுத் தோட்டங்கள் மூலம் விவசாயிகள் முன்னேற்றம் அடைய வேண்டும் எனவும் தெரிவித்தார். கமநலசேவை திணைக்கள கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்கள் தனது உரையில் இனிவரும் காலங்களில் வீட்டுத் தோட்டங்களை ஊக்குவித்து நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்ய முறைகளை உருவாக்க வேண்டுமெனவும் ஏழை விவசாயிகள் பணக்காரர்களாக மாற வேண்டுமெனவும் கூறினார்.
விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில் தமக்கு வீட்டுத் தோட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வம் இருக்கின்ற போதிலும் போதியளவு காணி வசதிகள் இன்மையால் தங்களால் அதனை முன்னெடுத்துச் செல்ல முடியாதுள்ளது எனக் கூறினார்கள்.