மலேசிய குழுவினர், ஆளுநர் கலந்துரையாடல்

மலேசியாவில் இருந்து வந்திருந்த குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் அவர்களை சந்தித்து பல்வேறு அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் உரையாடினர். இக்கலந்துரையாடல் 25 ஜனவரி 2020 அன்று இடம்பெற்றது.
முதலீட்டு வாரியம் தொடர்பான சாதகபாதக தன்மைகள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
ஆளுநர் அலுவலகத்தின் சிறப்பு அதிகாரங்களைக்கொண்டு முன்னெடுக்க இருக்கும் திட்டங்கள் தொடர்பில் அவர்கள் பல விடயங்களை கேட்டு அறிந்துகொண்டனர். எந்தெந்த துறை சார்ந்த எத்தகைய செயற்திட்டங்களுக்கான முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் வடக்கில் உள்ளன என்பதை தெரியப்படுத்துமாறும் பல்வேறுபட்ட வர்த்தக மற்றும் சேவைநோக்க செயற்பாடுகளில் தாம் ஆர்வமாக இருப்பதாகவும் மலேசிய குழுவினர் தெரிவித்தார்கள்.
சுத்தமான குடிநீரை வளிமண்டல நீர்ப்பதனை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளும் நவீன வசதியை வடக்கிலுள்ள மக்களுக்காக அறிமுகப்படுத்தும் திட்டம் தொடர்பில் அவர்கள் கூறிய போது வடக்கிலுள்ள கைத்தொழில் பேட்டையில் அதற்கான வசதிகளை பெற்றுத்தர வாய்ப்புள்ளதாகவும் அதற்கான முன்மொழிவுகளையும் ஒழுங்குகளையும் விரைவாக செய்யும்படி ஆளுநர் ஆலோசனை வழங்கினார் .
வடக்கின் விமான நிலையத்தினுடனான பல்வேறுபட்ட வசதிகளை மேம்படுத்த பல யோசனைகளும் இங்கு முன்மொழியப்பட்டன. நிபுணத்துவம் வாய்ந்த ஆங்கில ஆசிரியர்களை தருவித்து சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் குறுகியகால நவீன பயிற்சிகளால் இளைஞர்களை அறிவூட்டி அவர்களை சர்வதேச தரத்தில் நல்ல திறமையை பெறவைத்து உலகில் வேகமாக வளர்ந்துவரும் குறித்த துறைகளில் அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகளை பெற வழிகாட்டவும் தாம் தயாராக இருப்பதாக அவர்கள் ஆளுநரிடம் தெரிவித்தார்கள்.