மலேசியாவிடமிருந்து நாம் விவசாயம் தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் – ஆளுநர்

விவசாயத்தில் வளர்ச்சியடைந்துள்ள மலேசியாவிடமிருந்து நாம் விவசாயம் தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.

வடமாகாண சர்வதேச கைத்தொழில்துறை கண்காட்சியும் முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலும் நிகழ்வு 31 ஒக்ரோபர 2019 அன்று யாழ் வீரசிங்கம் மண்டபம் மற்றும் யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ் பொதுநூல கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலில் ஆளுநர் அவர்கள் டிஜிட்டல் தொடர்பாடல் ஊடாக கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு ஆளுநர் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், மலேசியா எமது பொதுநலவாய நாடுகளின் ஓர் அங்கத்துவ நாடாகும். தொழில்முறை ரீதியில் நிறைய பங்களிப்பினை மலேசியா எமக்கு வழங்கியுள்ளது. வடமாகணம் 29 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்டபோதும், யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களுக்கு மலேசியா நட்புறவு ரீதியாக பல்வேறுபட்ட உதவிகளை வழங்கியுள்ளது.

மேலும் நான் ஆளுநராகிய பின்னர் வடமாகாணத்தில் மீன்பிடித்துறைமுகம், விவசாயம், கல்வி, போக்குவரத்து, மழைநீர் சேகரிப்பு திட்டம் , குளங்கள் அபிவிருத்தி என பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று ஆளுநர் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

வடமாகாணத்திலுள்ள உள்ளுர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப்பொருட்களை வெளிநாட்டில் சந்தைப்படுத்தும் நோக்காக சுமார் 80 காட்சிக்கூடங்களில் உள்ளுர் உற்பத்திப்பொருட்கள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காட்சிப்படுத்தப்பட்டன. இவ் உற்பத்திப்பொருட்களை மலேசிய முதலீட்டாளர்கள் பார்வையிட்டதுடன் உற்பத்தியாளர்களுடன் உற்பத்தி தொடர்பாக கலந்துரையாடியதுடன் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு தங்களது பங்களிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர், இலங்கைக்கான மலோசியாவின் உயர்ஸ்தானிகர் யாங் தாய் தான் மற்றும் மலேசிய முதலீட்டாளர் குலசேகரன் , வடமாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் , சமூகசேவைகள், கூட்டுறவு , உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் , தொழிற்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் க.ஸ்ரீமோகனன் , யாழ் மாநகரசபை முதல்வர் மற்றும் வளவாளர்களாக கலாநிதி அகிலன் கதிர்காமர் , திரு பி. சிவதீபன் ஆகியோர் கலந்துகொணடனர்.