“காலநிலை மாற்றத்தை வெற்றி கொள்ளும் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தல்’’ எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் விவசாயக் கண்காட்சியானது உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 09.05.2019 தொடக்கம் 11.05.2019 வரையான மூன்று நாட்கள் நடைபெற்றன.
மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுக்கூர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த வடமாகாண பிரதம செயலாளர் அவர்கள் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற கண்காட்சிக் கூடங்களைப் பார்வையிட்டார்.
இக் கண்காட்சியை விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் வருகை தந்து பார்வையிட்டு பயனடைந்திருந்தார்கள். ஏறத்தாழ 800 விவசாயிகளும் 150 உத்தியோகத்தர்களும் இக் கண்காட்சியினைப் பார்வையிட்டு பயனடைந்துள்ளார்கள். பலரின் வேண்டுதலுக்கமைவாக கண்காட்சியானது 15.05.2019 வரை நீடிக்கப்பட்டிருந்தது.
பிரதம விருந்தனர் அவர்கள் தனது உரையில் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் சேதனப் பசளைகள் மற்றும் சேதன திரவப் பசளைகள் என்பன பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கும் மற்றும் ஏனையோருக்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் விதை நெல் சுத்திகரிக்கப்பட்டு அதன் முளைதிறன் பரிசோதிக்கப்பட்ட பின்னர் சுட்டி இடப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார் பிரதான பாதையின் அருகாக விற்பனைக் கூடம் ஒன்றினை அமைத்து அதில் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய உற்பத்திகளை விற்பனை செய்வதனூடாகவும் வருமானத்தினை அதிகரித்துக் கொள்ள முடியும் என்றும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கூறினார்
இக் கண்காட்சியில் பொதிப் பயிர்ச்செய்கை, சேதனப் பயிர்ச்செய்கை, மூலிகைப் பயிர்ச்செய்கை, மறுவயற் பயிர்ச்செய்கை, காளான் வளர்ப்பு, மாதிரி வீட்டுத் தோட்டச்செய்கை, தேனீ வளர்ப்பு, விவசாய உபகரணங்களை களத்தில் பயன்படுத்துதல், வரட்சி முகாமைத்துவம், பழப்பயிர்ச் செய்கை, பயிர் நோயியல் கட்டுப்பாடு போன்ற பல விவசாய முறைமைகள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றுக்கான விளக்கங்களும் பார்வையாளர்களிற்கு விவசாயப் போதனாசிரியர்களினால் வழங்கப்பட்டது.
வீட்டுத் தோட்டங்களுக்குத் தேவையான மரக்கறிநாற்றுக்கள் ,மற்றும் பூமரக்கன்றுகள், என்பன நியாயமான விலையில் பார்வையாளர்களிற்கு விற்பனை செய்யப்பட்டன.
நெற் பயிர்ச்செய்கையில் பரசூட் முறை மூலம் நாற்றுநடல், நாற்றுநடும் கருவி மூலம் நாற்றுநடல், கையால் நாற்றுநடல் போன்ற செயற்பாடுகளும் பார்வையாளர்களிற்கு செய்து காட்டப்பட்டு விளக்கமளிக்கப்பட்டன. அத்துடன் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இயங்கிவரும் மண்மாதிரி பரிசோதனை அலகும் பரிசோதனை முறைகளும் தொடர்பாக விவசாயிகளுக்கு விளங்கமளிக்கப்பட்டதுடன் இச் சேவையை அவர்கள் பெறுவதற்கான வழிவகைகளும் விளக்கிக் கூறப்பட்டது.