‘மன்னார் மக்களின் சுகாதார நம்பிக்கைக்கான அடிக்கல்லாகவே இந்த அடிக்கல்லை பார்க்கின்றேன்’ – ஆளுநர் நா. வேதநாயகன்

மன்னார் மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் தாங்கள் போதிய கவனம் பெறவில்லை என்ற உணர்வுடன் இருந்ததை நான் அறிவேன். ஆனால், இந்த நிலைமை படிப்படியாக மாறிக் கொண்டிருக்கிறது. இன்று இந்திய அரசாங்கத்தின் நன்கொடையுடன் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு உருவாகிறது. மருத்துவர்களுக்கான விடுதி வருகிறது. சிறுவர் விடுதி உருவாகிறது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (16.09.2026) புதன்கிழமை நடைபெற்றது. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கௌரவ சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ; ஜா ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய அரசாங்கத்தின் 600 மில்லியன் ரூபா நன்கொடை உதவியுடன் உருவாகவுள்ள இந்தப் பிரிவு, அவசர நிலைகளில் எமது மக்களுக்கு விரைவானதும் ஒருங்கிணைந்ததுமான மருத்துவ சேவையை வழங்குவதற்கு மிகவும் முக்கியமானதாக அமையும். மன்னார் மாவட்ட மக்களின் சார்பில், இந்தப் பெறுமதியான உதவிக்காக இந்திய மக்களுக்கும், இந்திய அரசாங்கத்துக்கும், இந்தியப் பிரதமர் மேன்மைதங்கிய நரேந்திர மோடி அவர்களுக்கும், இங்கு பிரதி நிதித்துவப்படுத்தும் இந்திய உயர் ஸ்தானிகர் அவர்களின் ஊடாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே, கடந்த இரண்டு ஆண்டுகளாக தாங்கள் நாட்டை வழிநடத்தி வரும் காலப்பகுதியில், வடக்கு மாகாணத்தின் தேவைகள் தொடர்பில் தேசிய மட்டத்தில் கிடைத்து வரும் கவனம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருப்பதை நாம் உணர்ந்து வருகின்றோம். ஊழல் ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட தாங்கள் முன்னெடுத்து வரும் தேசிய வேலைத்திட்டங்களின் பின்னால் எமது மக்களும் உறுதியாக அணிதிரண்டு நிற்கின்றனர். நாட்டின் நலனையும், அதன் எதிர்காலத்தையும் முன்னிறுத்தி தாங்கள் வழங்கி வரும் தலைமைத்துவம் உண்மையிலேயே அளப்பரியது. அதேவேளை, வடக்கு மக்களும் இந்த நாட்டின் ஏனைய மக்களுக்கு இணையான உரிமைகளுடனும் வாய்ப்புகளுடனும் கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற நோக்கில், எமது மாகாணத்தின் மீது தாங்கள் செலுத்தி வரும் விசேட கரிசனைக்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம். வெளிநாட்டு இராஜதந்திரிகள், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகளிடம் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது, எமது மக்கள் மீதான தங்களது அக்கறைக்கு ஒரு தெளிவான சான்றாகும்.

வடக்கை நாட்டின் ஓரமாக அல்ல, நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தின் ஒரு முக்கிய அங்கமாகப் பார்க்க வேண்டும் என்ற தங்களது அணுகுமுறையே இன்று நாம் காணும் இந்த மாற்றத்தின் அடிப்படையாக நான் கருதுகின்றேன்.

வடக்கு மாகாண சபைக்கு கிடைக்கும் நிதி ஒதுக்கீடுகளும் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 99 சதவீதத்தை நாம் திறம்படப் பயன்படுத்தியுள்ளோம். அதற்கான ஒரு முக்கியமான அங்கீகாரமாக, வடக்கு மாகாண சபை வரலாற்றில் முதல் முறையாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடமிருந்து ருஙெரயடகைநைன ழுpinழைn கிடைத்துள்ளது. இது ஒரு நிர்வாகப் பெறுபேறு மட்டுமல்ல. நிதி கிடைத்தால் அதை மக்களின் தேவைகளாக மாற்றுவதற்குத் தயாராக இருக்கும் ஒரு நிர்வாகம் வடக்கில் இருக்கிறது என்பதற்கான சான்றாகவும் இதனை நான் பார்க்கிறேன்.

மன்னார் மாவட்டத்தின் சுகாதாரத் தேவைகளிலும் இதே அணுகுமுறை காணப்படுகிறது. ஜனாதிபதி அவர்களின் தலைமையின் கீழும், சுகாதார அமைச்சர் கௌரவ நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் பங்களிப்புடனும், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் மேம்பாட்டுக்காக நாம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

நான் நேரடியாக இந்த மருத்துவமனையைப் பார்வையிட்டு அங்கிருந்த தேவைகளைப் புரிந்து கொண்ட பின்னரே, சிறுவர் விடுதிக்காக 236 மில்லியன் ரூபாவும், மருத்துவர்களின் விடுதிக்காக 242 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2026ஆம் ஆண்டில் மன்னார் மாவட்ட சுகாதாரத் துறைக்காக மாத்திரம் 672 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு எட்டு மருத்துவர்களை உள்ளகப் பயிற்சிக்காக நியமித்தமைக்காக கௌரவ சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களுக்கு மன்னார் மக்களின் சார்பில் எனது விசேட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மன்னார் மருத்துவமனையை எதிர்காலத்தில் இன்னும் வலுவான மருத்துவ நிலையமாக உருவாக்குவதற்கு உதவும் என்று நான் நம்புகிறேன்.

மேலும், சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ள ஊவு ளுஉயnநெச வசதியும் மன்னார் மக்களுக்கு கிடைக்கவுள்ளது. இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்துதான் ஒரு முழுமையான சுகாதாரக் கட்டமைப்பு உருவாகும். எமது நோக்கம் ஒரு கட்டடத்தை அமைப்பது மட்டும் அல்ல. மன்னார் மக்கள் தங்கள் மாவட்டத்திலேயே தரமான மருத்துவ சேவையைப் பெறக்கூடிய நிலையை உருவாக்குவதே எமது நோக்கம்.

மன்னார் மாவட்டத்தின் சுகாதாரத் துறையை இன்னும் வலுப்படுத்துவதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம். இன்று நடுகை செய்யப்படும் இந்த அடிக்கல் விரைவில் ஒரு நவீன மருத்துவக் கட்டமைப்பாக எழுந்து, ஆயிரக்கணக்கான எமது மக்களின் உயிருக்கும் நலனுக்கும் பாதுகாப்பாக அமையட்டும், என்றார் ஆளுநர்.