நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் எமது திட்டங்களுக்கான நிதியை குறைக்காது விடுவித்துள்ளமையானது, இவ்வரசாங்கத்தின் சிறப்பான நிதி முகாமைத்துவத்தை வெளிப்படுத்துவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று (20.12.2025) சனிக்கிழமை காலை வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,
‘மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இந்த அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். இதன் ஓர் அங்கமாகவே இவ்வுதவித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. மாகாணத்துக்குரிய நிதி ஒதுக்கீடுகளை உரிய நேரத்தில் விடுவித்து, அபிவிருத்திப் பணிகள் தடையின்றி நடைபெறுவதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
உதவிகளை வழங்குவதோடு எமது கடமை முடிந்துவிடுவதில்லை. இத்திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்ட நோக்கத்தை அடைகின்றனவா என்பதை அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கண்காணிப்பார்கள். வடக்கின் பல சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் தமது கடின உழைப்பால் உயர் நிலையை அடைந்துள்ளனர். அவர்களுக்கான சந்தை வாய்ப்புகளையும், ஏற்றுமதி வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுக்க நாம் தயாராக உள்ளோம்.
நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் வடக்கு மாகாணத்தின் பங்களிப்பு தற்போதைய நிலையில் குறைவாகவே உள்ளது. இத்தகைய வாழ்வாதார ஊக்குவிப்புத் திட்டங்கள் ஊடாக அந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, தேசிய பொருளாதாரத்தில் வடக்கின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய நாம் முயற்சித்து வருகின்றோம், என்றார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஊடாக உணவு உற்பத்தி, விவசாயம், சிறுகைத்தொழில் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் 80 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு முழு மானிய அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட்டன.
தொழிற்துறை திணைக்களத்தின் ஊடாக 37 தொழில் முயற்சியாளர்களுக்கு அரை மானிய அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் துறை கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் க.சிவகரன், சாவகச்சேரி பிரதேச செயலர் எஸ்.சத்தியசோதி, தொழிற்துறை திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் திருமதி க.துஷpயா, வடக்கு மாகாண பிரதம செயலக உதவிச் செயலர் திருமதி அனெற் நிந்துஸா அன்ரனி டினேஸ் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.







