குளத்தின் வான் மேவுவதால் ஆண்டுதோறும் டிசெம்பர், ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் போக்குவரத்துத் துண்டிக்கப்படும் அம்பலப்பெருமாள் குளப் பகுதியில், ரூ.200 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் பெட்டிவடிகால் மற்றும் அணுகுவீதி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 17.12.2025 அன்று அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய பகுதிகளுக்கு அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களப் பணிப்பாளர்களுடன் களப்பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்போது இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், அம்பலப்பெருமாள் குளப் பகுதியில் மேம்பாலம் அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக, அம்பலப்பெருமாள் குளத்தின் வான் மேவி சுமார் இரண்டு அடி உயரத்துக்கு நீர் பாய்வதால், டிசெம்பர், ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அப்பகுதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.
மக்களின் கோரிக்கைக்கு அமைவாக, அப்பகுதியில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்திருந்தார். இதற்கமைய, வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ், ரூ.200 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் பல அறைகளைக் கொண்ட பெட்டிவடிகால் மற்றும் அணுகுவீதி அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த புனரமைப்புப் பணிகளை நேற்று (22.10.2026) பார்வையிட்ட ஆளுநர், பணிகளைச் சிறப்பாக முன்னெடுத்து வரும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினரைப் பாராட்டியதுடன், பணிகளை மிக விரைவாக நிறைவு செய்து மக்களின் பயன்பாட்டுக்குக் கையளிக்குமாறும் அறிவுறுத்தினார்.


