மகளிர் விவகார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன் கிழமை (23.07.2025) நடைபெற்றது.

மகளிர் விவகார அமைச்சு, சமூகசேவைகள் திணைக்களம், தொழிற்றுறை திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு என ஒவ்வொரு திணைக்களத்தினதும் திட்டங்களின் முன்னேற்றங்கள் விரிவாக ஆராயப்பட்டன.

கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழான பனை தென்னை வள கூட்டுறவு அபிவிருத்திச் சங்கங்கள் வருமானத்தைப் பெற்றுத் தரும் செயற்பாடுகளில் ஈடுபடும் நிலையில் அவர்களுக்கு கூடுதலான நிதியை ஒதுக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

மேலும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தாத அபிவிருத்தியால் எந்தவொரு பயனுமில்லை எனக் குறிப்பிட்ட ஆளுநர், திட்டங்களைத் தயாரிக்கும்போது மக்களுக்கான நலன் என்ன என்பதை சிந்தித்தே உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, திட்டமிடல், பொறியியல் சேவை ஆகியோரும், சமூகசேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் செல்வி அகல்யா செகராஜா, தொழிற்றுறை திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி செ.வனஜா, கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் ந.திருலிங்கநாதன், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் திருமதி பா.அபிராமி கட்டடங்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்தினதும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.