“பொறுப்புணர்வும் பணிவும் கொண்ட தலைமைத்துவப் பண்புகளைப் பாடசாலை அதிபரிடம் காண்கின்றேன்” – ஆளுநர் பாராட்டு

நயினாதீவு மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற அமுத விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், பாடசாலையின் 80ஆவது ஆண்டு நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்ததுடன், ‘கல்யாணி’ மலரையும் வெளியிட்டு வைத்தார்.

பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இன்று (30.10.2026) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற இந்நிகழ்வுக்குப் பாடசாலை அதிபர் தில்லைநாதன் நிதர்சனன் தலைமை தாங்கினார்.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், கடலால் சூழப்பட்ட தீவில் வாழும் மக்களின் பிள்ளைகளுக்குத் தரமான கல்வியை வழங்குவது இலகுவான பணியல்ல எனக் குறிப்பிட்ட ஆளுநர், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சவால்களைக் கடந்து நயினாதீவு மகா வித்தியாலயம் எண்பது ஆண்டுகளாகத் தனது கல்விப் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்திருப்பது, அச்சமூகத்தின் உறுதியையும் கல்வியின் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாகக் கூறினார். இதற்காகப் பாடசாலையின் ஆசிரியர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

அதிபரின் தலைமைத்துவப் பண்புகளைப் பாராட்டிய ஆளுநர், அதிபர் தனது உரையின்போது, நினைவு மலரில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலோ, நிகழ்வில் ஏதேனும் தவறுகள் அல்லது விடுபடல்கள் இருந்தாலோ அதற்குத் தாமே பொறுப்பேற்பதாகக் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார். இன்று பலரிடமும் அருகிவரும் பண்பாகப் பொறுப்பேற்பது காணப்படுகின்றது. தவறு நேரும்போது மற்றவர்களைக் கைகாட்டாமல் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வது மிக முக்கியமான தலைமைத்துவப் பண்பு எனத் தெரிவித்தார்.

‘நான் பல இடங்களிலும் வலியுறுத்தி வருகின்ற தலைமைத்துவப் பண்பை இந்த அதிபரிடம் காண்கின்றேன். ஒருவர் உயர்ந்த பதவிக்கு வரும்போது பணிவும் அவசியம். அந்தப் பண்பும் அவரிடம் இருக்கின்றது’ எனக் குறிப்பிட்ட ஆளுநர், அதிபரின் பொறுப்புணர்வு, பணிவு மற்றும் தலைமைத்துவப் பண்புகளுக்காக அவரை மனதாரப் பாராட்டினார்.

மாணவர்களிடையே உரையாற்றிய ஆளுநர், தலைமைத்துவம் என்பது மற்றவர்களுக்குக் கட்டளையிடுவது அல்ல, ஒரு பிரச்சினை ஏற்படும்போது பொறுப்பேற்பதும், நண்பர் ஒருவர் சிரமத்தில் இருக்கும்போது உதவுவதும், தவறு செய்தால் அதனை ஒப்புக்கொள்வதும், மற்றவர்களின் கருத்துகளைக் கேட்பதும், இயன்ற உதவிகளைச் செய்வதுமாகும் என விளக்கினார். அறிவுடன் இரக்க குணமும் அவசியம் என்றும், தமது வெற்றியை மாத்திரமன்றி மற்றவர்களின் முன்னேற்றத்தையும் சிந்திப்பவரே சிறந்த தலைவராக உருவாக முடியும் என்றும் வலியுறுத்தினார்.

தகவல்கள் விரைவாகக் கிடைக்கும் இன்றைய சூழலில், செய்திகளையும் காணொலிகளையும் பார்த்தவுடன் அவற்றை உண்மை என நம்பிவிடாமல், ஆதாரங்களை ஆராய்ந்து நம்பகமான தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து முடிவெடுக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையும் மதுப் பழக்கமும் இளம் தலைமுறையின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக உள்ளன எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், நண்பர்களின் வற்புறுத்தல் அல்லது புதிய அனுபவங்களை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் காரணமாகத் தமது வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய பழக்கங்களுக்கு இடமளிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். இத்தகைய பழக்கங்களுக்கு அடிமையாகும் ஆபத்தில் உள்ள நண்பர்களை அவமதிக்காமல், அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள வழிகாட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, தற்போதைய கல்விச் சீர்திருத்தங்கள் மனப்பாடம் செய்து பரீட்சைகளில் பெறுபேறுகளைப் பெறுவதுடன் மட்டுப்படாமல், சிந்தனைத் திறன், படைப்பாற்றல், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் ஆற்றல், வாழ்க்கைக்குத் தேவையான திறன்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன எனக் குறிப்பிட்டார். இத்தகைய மாற்றங்களின் பயன் மாணவர்களின் அன்றாடச் செயற்பாடுகளிலும் வெளிப்பட வேண்டும் என்றும், பாடசாலை வளாகத்தைத் தூய்மையாக வைத்திருத்தல், பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல், மற்றவர்களை மதித்தல் மற்றும் பொறுப்புடன் நடந்துகொள்ளுதல் ஆகியவற்றிலிருந்தே அந்த மாற்றம் ஆரம்பமாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், தமது அடுத்த தலைமுறைகள் சிறப்பாக வாழ வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இப்பாடசாலையை உருவாக்கியவர்கள் அதற்கான பணியைத் தொடங்கினர். அந்த நம்பிக்கையை இன்று நாம் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கின்றோம் எனக் குறிப்பிட்ட ஆளுநர், மாணவர்களின் கனவுகள் உயர்வாகவும், உள்ளம் மனிதநேயத்துடனும் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் வளரும்போது அவர்களுடன் சமூகமும் வளர வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாகப் பாடசாலையின் 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவுச் சின்னத்தை ஆளுநர் திறந்து வைத்தார். தொடர்ந்து, ‘கல்யாணி’ எனும் 80ஆவது ஆண்டு நினைவு மலரையும் வெளியிட்டு வைத்தார். அந்த மலர் தொடர்பான ஆய்வுரையை முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளரும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவருமான கு. சரவணபவானந்தன் நிகழ்த்தினார்.

முன்னதாக நிகழ்வில் ஆசியுரையை நயினை நாகபூசணி அம்மன் ஆலய சிவஸ்ரீ கைலை வாமதேவ குருக்களும், நயினாதீவு புனித அந்தோனியார் ஆலயப் பங்குதந்தை அருட்தந்தை லியனாஸ் அவர்களும் வழங்கினர். மேலும், மாணவர்களின் ஆங்கில உரை நிகழ்வையும் ‘பாஞ்சாலி சபதம்’ கூத்து நிகழ்வையும் ஆளுநர் பார்வையிட்டார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் இந்து நாகரிகத்துறையின் முன்னாள் பேராசிரியர் மா.வேதநாதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமஸ்கிருதத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் மகேஸ்வரக் குருக்கள் பாலகைலாசநாத சர்மா, தீவக வலயக் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ப.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் ஓய்வுநிலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.