பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல்

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டத்திலுள்ள பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் மற்றும் தேவைப்பாடுள்ள பெண்தொழில் முயற்சியாளர்களுக்கு மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டத்திலுள்ள பெண்தலைமைத்துவக்குடும்பங்கள் மற்றும் பெண்தொழில்முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வானது 16.10.2026 அன்று வவுனியா மாவட்டத்திலுள்ள கிராம அபிவிருத்தித்திணைக்களத்தின் பல்நோக்கு பயிற்சி நிலைய மண்டபத்தில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் எழிலரசி அன்ரன்யோகநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. அந் நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சரும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவருமான கௌரவ உபாலி சமரசிங்ஹ அவர்கள் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டார். அவர்களுடன் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் அவர்களும் வவனியா மாவட்டச் செயலாளர் திரு.P.யு.சரத்சந்திர மற்றும் மன்னார் மாவட்டச்செயலாளர் திரு.க.கனகேஸ்வரன் அவர்களது பங்குபற்றலுடனும் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 34 பயனாளிகளுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 48 பயனாளிகளுக்கும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 27 பயனாளிகளுக்கும் ஏறத்தாழ 10 மில்லியன் பெறுமதியான உதவித்திட்டங்களான தையல் இயந்திரங்கள், நீர் இறைக்கும் மின்மோட்டர் உள்ளிட்ட விவசாயப் பொருட்கள் குளிர்சாதனப்பெட்டி, உறைப்பான்(freezer) உணவு உற்பத்திசார் பொருட்கள், கால்நடை வளர்ப்பிற்கான உதவித்தொகைகள் என தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் மற்றும் தேவைப்பாடுள்ள பெண்தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் வவுனியா தெற்கு பிரதேசசெயலாளர், வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச்செயலாளர்கள், பிரதம கணக்காளர், பிரதித்திட்டமிடல்ப்பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், வடமாகாண சமூகசேவைகள் திணைக்களம், வடமாகாண தொழிற்துறைத் திணைக்களம், வடமாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், வவுனியா மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள பதவிநிலை உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர்கள், வவுனியா மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.