புளியங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பரசூட் முறையிலான நெற்ச்செய்கை அறுவடை வயல்விழா

கடந்த 28.01.2026 அன்று PSDG 2025 திட்டத்தின் கீழான பரசூட் முறையிலான நெற்ச்செய்கை மற்றும் பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் வழிகாட்டலின் கீழ் நெல் வர்க்க ஊக்குவிப்பு திட்டத்தின் கீழான நெற்ச்செய்கைக்கான வயல்விழா நிகழ்வானது புளியங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பரசங்குளம் கிராமத்தில் தொழில்நுட்ப உதவியாளர் க.துருபதன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் விதைகள் மற்றும் நடுகைப்பொருட்கள் அபிவிருத்தி நிலையத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர், விதைகள் அத்தாட்சிபடுத்தல் சேவையின் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதி விவசாயப் பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

தொழில்நுட்ப உதவியாளரின் வரவேற்புரையை தொடர்ந்து விவசாயியின் களமானது பார்வையிடப்பட்டது. இதன் போது பரசூட் முறையிலான நெற்ச்செய்கையினை மேற்கொண்ட விவசாயியான திரு இ.தனபாலசிங்கம் அவர்களால் விவசாயிகளுக்கு பரசூட் முறையில் நாற்றுமேடையினை தயார் செய்வது தொடர்பாக செய்முறை விளக்கம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தொழில்நுட்ப உதவியாளர் திரு.க.துருபதன் அவர்களால் நெல் வர்க்க ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பபட்ட Bw 312, At 313, Bg 369, Bg 374, Bg 375, Ld 376, At 378, Bg 409 ஆகிய நெல் வர்க்கங்களின் உயரம், விளைச்சல். முதிர்ச்சி காலம் மற்றும் ஏனைய சிறப்பியல்புகள் தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நெற் பயிருக்கான பாடவிதான உத்தியோகத்தர் திரு கு.கஐரூபன் அவர்களினால் பரசூட் முறையிலான நெற்செய்கையில் உற்பத்தி செலவு தொடர்பான விளக்கங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி J.M முரளீதரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் பரசூட் முறையிலான நெற்ச்செய்கை மேற்கொண்ட விவசாயிகளுக்கு பாராட்டுத் தெரிவித்ததோடு வருகின்ற சிறுபோகத்தில் பரசூட் முறையிலான நெற்ச்செய்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதுடன் அதனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாகாண விவசாயக் திணைக்களத்தின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் மானியத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து விதைகள் மற்றும் நடுகைப்பொருட்கள் அபிவிருத்தி நிலையத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர் திரு. சு.சஞ்ஜீபன் அவர்கள் Bw 312, At 313, Bg 369, Bg 374, Bg 375, Ld 376, At 378, Bg 409 அகிய நெல் வர்க்கங்களின் சிறப்பியல்புகள் தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கமளித்ததோடு விவசாயிகள் பரசூட் முறையில் சுய விதை உற்பத்தியில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார்.
இந் நிகழ்வானது மதியம் 12.30 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.