திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பல்வேறு புதிய விவசாயத் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் வயல் விழா 09.04.2019ம் திகதி பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி சிறிரங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். மாகாண நன்னீர் மீன் வளர்ப்புப் பிரிவின் பணிப்பாளர் பி.முகுந்தன், மாகாண விவசாய அமைச்சின் பிரதம கணக்காளர் திருமதி.ம.வசந்தமாலா மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆ.சாந்தசீலன் அவர்களும், மாகாண விவசாயத் திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் திருமதி. இ. சிவசொரூபி மற்றும் உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என 410 பேர் இவ் வயல் விழாவில் கலந்து பயன்பெற்றனர்.
இவ் வயல் விழாவில் கீழ்வரும் விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் செயல்முறை விளக்கங்களும் பாடவிதான உத்தியோகத்தர்கள், பண்ணை முகாமையாளர் மற்றும் விவசாயப் போதனாசிரியர்களினால் பங்குபற்றுநர்களிற்கு வழங்கப்பட்டன.
1. நகர் புற வீட்டுத்தோட்டம் தொடர்பான திட்டமிடல்,
பயிர் கோபுரம் பொதி முறைப் பயிர் செய்கை, உண்ணக் கூடிய பயிர்களால் ஆக்கப்பட்ட தரை அலங்கரிப்பு (Edible landscape), அசோலா உற்பத்தியும் நன்னீர் மீன்வளர்ப்பும், தூவல் மற்றும் சொட்டு நீர்ப்பாசன முறைகள், பசுமை சுவர் (Green wall), கழிவுப் பொருட்களிலிருந்து பயிர் செய்கை, கலப்புப் பயிர் செய்கை முறைகள் தொடர்பாக செயன்முறை விளக்கங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டன.
2. மாதுளைச் செய்கை
தரமான மாதுளம் பழங்களைப் பெற்றுக்கொள்வதற்காக மாதுளைச் செடிகளை கத்தரித்தல் மற்றும் பழக்கப்படுத்தல், நீர் வாதுக்களை அகற்றல், பொசிவு நீர்பாசனம், பசளையிடல், காய்களிற்கு உறையிடுதல் போன்ற தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் செயன்முறை விளக்கங்கள் பங்குபற்றுநர்களிற்கு வழங்கப்பட்டன.
3. அன்னாசி செய்கை
அன்னாசிச் செய்கையில் தரமான பழங்களை பெற்று அதன் உற்பத்தியைக் கூட்டுவதற்காக நடுகை முறை, பசளைப் பாவனை, சொட்டு நீர்ப்பாசனம், மற்றும் பூத்தலைத் தூண்டுவதற்காக ஜிபரலிக்கமிலம் பாவித்தல் போன்ற தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் செயன்முறை விளக்கங்கள் பங்குபற்றுநர்களிற்கு வழங்கப்பட்டன.
4. மாமர செய்கை
தரமான மாம் பழங்களைப் பெற்றுக்கொள்வதற்காக மாமரச்செய்கையில் மாமரத்தை கத்தரித்தலும் பழக்கப்படுத்தலும், கத்தரிக்கும் உபகரணங்களின் பயன்பாடு மற்றும் கத்தரித்தல் மேற்கொண்டதன் பின் போடா கலவை பயன்படுத்தல், பழ ஈ முகாமைத்துவத்தில் புரதப் பொறி பாவனை, காய்களுக்கு உறையிடுதல் மற்றும் மா இலை தத்தி முகாமைத்துவம் தொடர்பான தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் செயன்முறை விளக்கங்கள் பங்குபற்றுநர்களிற்கு வழங்கப்பட்டன.
5. நாற்று மேடைத் தொழில் நுட்பம்
நாற்று மேடை வகைகள், நாற்று மேடை தாயாரித்தல், மண் தொற்று நீக்கும் முறைகள், விதைப் பரிகரணம், விதை தொற்று நீக்கம், வரிசையில் விதையிடல், நாற்று மேடைக்கு நிழல் வழங்கும் முறைகள் மற்றும் நாற்றுக்களை வன்மைப்படுத்தல் தொடர்பான தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் செயன்முறை விளக்கங்கள் பங்குபற்றுநர்களிற்கு வழங்கப்பட்டன.
6. சேதன விவசாயம்
இயற்கையோடு இணைந்த வகையில் நஞ்சற்ற மரக்கறிவகைகளை உற்பத்தி செய்யும் நோக்கில் சேதன விவசாய செய்கைத் துண்டம் அமைக்கப்பட்டிருந்தது. சேதனப் பசளைகள் தயாரிப்பு மற்றும் பயன்பாடு, தாவர பீடைநாசினிகள் தயாரிப்பு மற்றும் பயன்பாடு சேதன விவசாயத்தில் மூலிகைத் தாவரங்களின் முக்கியத்துவம் தொடர்பாகவும் பங்குபற்றுநர்களிற்கு விளக்கங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் சேதன விவசாயச் செய்கைக்குத் தேவையான தாவர பிரித்தெடுப்பு பீடைநாசினிகளும் விற்பனை செய்யப்பட்டன.
7. மிளகாய்ச் செய்கையில் ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவம்.
மிளகாயில் இலைச் சுருளல் தாக்கத்தை முகாமைத்துவம் செய்வதற்காக மிளகாய் நாற்றுக்கள் நடுகை செய்வதற்கு இரண்டு கிழமைக்கு முன்பாக மூன்று வரிசையில் சோளம் எல்லைப் பயிராக நடுகைசெய்யப்பட்டு அத்துண்டத்தில் நுண் கால நிலையை ஏற்படுத்தும் முகமாக வாழைச்சருகு மற்றும் காய்ந்த இலைகள் மூடுபடையாக இடப்பட்டது அத்துடன் தூவல்நீர்ப்பாசனம் மூலம் நீா் பாய்ச்சப்பட்டது. மேலும் பீடைகளை முகாமைத்துவம் செய்வதற்காக ஐந்திலைக்கரைசல், மஞ்சள் ஒட்டுப்பலகை பாவித்தல் முதலான தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் இத் தொழில்நுட்பங்கள் தொடர்பாக பங்குபற்றுநர்களிற்கு விளக்கங்கள் வழங்கப்பட்டன.
8. விவசாயத்துறையில் இயந்திரமயமாக்கல்
சேதனப் பசளை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தாவர மீதிகளை சிறு துண்டுகளாகவும் துகள்களாகவும் வெட்டும் (multi chopper) இயந்திரத்தைப் பயன்படுத்தி தாவரப் பகுதிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கூட்டெரு தயாரிக்கும் செயன் முறை செய்து காட்டல் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
நான்கு சில்லு உழவு இயந்திரத்தின் உதவியுடன் மேட்டுநில விதையிடும் கருவியைப் பயன்படுத்தி நிலக்கடலை, சோளம், கௌபி விதைகள் வரிசையில் விதைப்பு செய்து காட்டப்பட்டது.
உண்மை விதை வெங்காய விதைப் பிரித்தெடுப்பானது வெங்காய விதைப் பிரித்தெடுப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி செயன் முறை மூலம் செய்து காட்டல் மேற்கொள்ளப்பட்டது.
நெல் சுத்திகரிக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி விதை நெல் ஆனது சுத்திகரிப்புச் செய்து காட்டப்பட்டது.
சிறிய, பெரிய ஊடுசாகுபடி இயந்திரத்தைப் பயன்படுத்தி பயிர்களுக்கிடையே களைகட்டுப்பாடு முறை செய்து காட்டப்பட்டது.
9.காளான் செய்கை
காளான் செய்கை பகுதியில் மரத்தூள், மற்றும் வைக்கோல் ஊடகத்திலான காளான் செய்கை தொடர்பாக காட்சிப்படுத்தப்பட்டதுடன் செயன்முறையுடன் கூடிய விளக்கங்கள் வழங்கப்பட்டன. ஊடகத்தயாரிப்பு, பொதிசெய்தல், தொற்று நீக்கல், வித்தி உட்புகுத்தல், அடைகாத்தல், அறுவடை செய்தல் முதலான தொழில் நுட்பங்கள் தொடர்பாக காட்சிப்படுத்தப்பட்டதுடன் செயன்முறையுடன் கூடிய விளக்கங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் அவலோன், அமெரிக்கன் ஒயிஸ்ரர். பூட்டாந் ஒயிஸ்ரர், பால் காளான், மார்கந்துறை வெள்ளை காளான் செய்கை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் காளான் உற்பத்தியாளர் சங்கத்திற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
10. வாழை இனங்களின் தாய்த் தாவரத் துண்டம்
தாய்த் தாவரமாக வெண்கதலி, மலேசியன் கதலி, புளிக்கதலி, கொழும்பு கதலி, செவ் வாழை, மருத்துவ வாழை, ஐம்பொன், ஆனை வாழை, பச்சை நாடான், கவண்டிஸ், வன்னி மொந்தன், சாம்பல் மொந்தன், வெண் மொந்தன், அபிசேக மொந்தன், கப்பல், நேத்திரா, பூவாழை, கொழும்பு இதரை, உள்ளுர் இதரை, பண்டி வாழை, சுவேந்திரா என 22 வாழை இனங்கள் நடுகை செய்யப்பட்டுள்ளன. உறுஞ்சிகளைப் பராமரித்தல், வாழைக் குழைக்கு உறையிடல், சொட்டு நீரிப்பாசனத்தின் மூலம் பயிர்ச்செய்கை, போன்ற விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் செயன்முறையுடன் கூடிய விளக்கங்கள் பங்குபற்றுநர்களிற்கு வழங்;கப்பட்டன.
11. பழ ஈயின் தாக்கம்
பழ ஈயின் தாக்கத்தை முகாமைத்துவம் செய்வதற்கு பெரமோன் பொறி பயன்படுத்தல், காய்களிற்கு கடதாசி மற்றும் பொலித்தீனால் உறையிடல் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் பங்குபற்றுநர்களிற்கு விளக்கங்களும் வழங்;கப்பட்டன.
12. வீட்டுத் தோட்டம்
வீட்டுத்தோட்டம் தொடர்பான திட்டமிடல், போசணை ரீதியாக காபோவைதரேற்று கொண்டவை (மரவள்ளி, வற்றாளை, குரக்கன்) புரதம் கொண்டவை (பயறு, கௌபி, உழுந்து, பயற்றை, அவரை), கொழுப்பு கொண்டவை, உயிர்ச்சத்து, கனிப்பொருட்கள் கொண்டவை (மரக்கறிகள், இலைக்கறிவகைகள), பழப்பயிர்கள், வாசனைப் பயிர்கள் (இஞ்சி, மஞ்சள், கறிவேப்பிலை), மூலிகைப் பயிர்கள் (துளசி, தூதுவளை, முடக்கொத்தான்) போன்ற பயிர்கள் நடுகை செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. பொதி முறை பயிர் செய்கையின் போது பயிருக்குத் தேவையான சகல போசணைப் பொருட்களைக் கொண்ட மண் ஊடகம் தயாரிக்கப்பட்டு, காற்றூட்டல், நீர்வடியும்திறன், நோய் எதிர்க்கும் திறன் என்பனவற்றை அதிகரித்துக்கொள்ள வளர்ப்பு ஊடகத்துடன் சிறிதளவு கருக்கிய உமியை கலத்தல் தொடர்பான செய்து காட்டல் காட்சிப்படுத்தப்பட்டதுடன் பங்குபற்றுநர்களிற்கு விளக்கங்களும் வழங்கப்பட்டன.