பருதித்துறை – பொன்னாலை வீதியில், தொண்டைமனாறு அரசடி முதல் பருதித்தித்துறை துறைமுகம் வரையிலான வீதியின் புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு

வீதிகளைப் புனரமைப்புச் செய்யாமல் எந்தவொரு அபிவிருத்தியும் சாத்தியமில்லை. வீதி அபிவிருத்தி மிக மிக முக்கியமானது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
பருதித்துறை – பொன்னாலை வீதியில், தொண்டைமனாறு அரசடி முதல் பருதித்தித்துறை துறைமுகம் வரையிலான வீதியின் புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு வல்வெட்டித்துறை சந்தியில் 13.03.2025 அன்று வியாழக்கிழமை  இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர், கடற்கரையோரமாகச் செல்லும் இந்த வீதியின் பாதுகாப்புச் சுவர்கள் கூட கடந்த காலத்தில் விழுந்துள்ளன. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இந்த வீதி புனரமைக்கப்படுவது முக்கியமானது. மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் வீதிப் புனரமைப்புக்கு நிதி கோரியிருந்தார். அதற்கு அமைவாக நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இதற்காக ஜனாதிபதிக்கும், நெடுஞ்சாலைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இந்த நேரத்தில் வடக்கு மக்கள் சார்பில் நன்றிகளைக் கூறுகின்றேன். அரசாங்கம் வடக்கு மாகாணத்தின் வீதி அபிவிருத்திக்காக இந்த ஆண்டுக்கு மாத்திரம் 5,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருக்கின்றது. எதிர்காலத்தில் இங்கு பல வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரி.பாஸ்கரன், இந்த வீதியை சில இடங்களில் அகலிப்புச் செய்யவேண்டியிருக்கின்றது. மக்கள் தங்கள் காணிகளை விட்டுத்தந்து உதவி செய்யவேண்டும். அதேபோல, மக்களின் குடியிருப்புக்கான நீர் விநியோகமோ அல்லது வேறு நடவடிக்கைகளுக்காகவே வீதியை அபிவிருத்தி செய்த பின்னர் அதை வெட்டுவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். எனவே, அவ்வாறான செயற்பாடுகள் ஏதும் முன்னெடுக்க திட்டமிட்டிருந்தால் அதை வீதி அபிவிருத்தி பணி ஆரம்பிக்க முன்னரே செய்து முடிக்குமாறு கோருகின்றேன், என்றார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் ஜீவநாதன், இலங்கையிலுள்ள 9 மாகாணங்களிடமிருந்தும் எமது அமைச்சு திட்டமுன்மொழிவுகளைக் கோரியது. வடக்கு மாகாணத்திலிருந்துதான் எமக்கு அடுத்த நாளே திட்டமுன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. ஏனைய மாகாணங்களிலிருந்து எம்மை தொடர்புகொண்டு விளக்கங்கள் கேட்கின்றனரே தவிர திட்டமுன்மொழிவுகளை இன்னமும் அனுப்பவில்லை. உண்மையில் உங்களுக்கு வடக்கு மாகாண ஆளுநராக மிகச் சிறந்த நிர்வாகியான நா.வேதநாயகன் அவர்கள் கிடைத்துள்ளார். அதேபோல அவருக்கு பக்கபலமாக பிரதம செயலராக இளங்கோவன் இருக்கின்றார் என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கடற்றொழில் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், யாழ்.மாவட்டச் செயலர் ம.பிரதீபன், பருத்தித்துறை பிரதேச செயலர் சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.