பரசூட் முறை மூலமாக நாற்றுநடுகை வயல் விழா – மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தின் 2023/24 காலபோகத்தில் குளங்கள் மற்றும் கிராமங்கள் மறுமலர்ச்சி (CRIWMP) திட்டத்தின் உதவியுடன் விவசாய திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் பரசூட் முறையை ஊக்கவிக்கும் முகமாக 20 ஏக்கர்களில் பரசூட் முறை மூலம் நடுகை செய்யப்பட்டது. அதற்கமைவாக ஆட்காட்டிவெளி விவசாய போதனாசிரியர் பிரிவின் கீழ் வரும் இசங்கன்குளம் பகுதியில் விவசாய போதனாசிரியர் செல்வி ஞா. கஜகர்ணியின் ஆலோசனைகளுக்கு அமைவாக திரு க.வேதநாயகம் எனும் விவசாயி குறித்த முறைமூலம் நெற்செய்கை மேற்கொண்டிருந்தார். மேற்படி நெற்செய்கையின் முன்னேற்றத்தினை ஏனைய விவசாயிகள் மட்டத்தில் பிரபல்யப்படுத்தும் நோக்குடன் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திரு S.F.C. உதயசந்திரன் தலைமையில் 29.02.2024 அன்று வயல்விழா இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் உதவி விவசாய பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், கமநல சேவைநிலைய உத்தியோகத்தர்கள், நீர்பாசன திணைக்களம் சார்ந்த  உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பு தலைவர்கள் மற்றும் கிராம விவசாயிகளும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த முன்னோடி விவசாயின் வயல் நிலத்தில் பரசூட் முறை மூலமான நாற்று நடுகை மட்டுமல்லாது VAT (வர்க்க தகவமைப்பு பரிசோதனை) முறையில் இரு புதிய நெல் இனங்களும் பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டிருந்தது. அவற்றின் முடிவுகளும் குறித்த வயல் விழாவில் விவரிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட உதவி விவசாய பணிப்பாளர் திரு. ம. மதன்ராஜ் குலாஸ் கருத்து தெரிவிக்கையில் பரசூட் முறையிலான நெற்செய்கையானது வீசிவிதைப்பு முறையினை விட அதிகளவு விளைச்சல் தருவதுடன் கை நடுகை முறையுடன் ஒப்பிடும் போது உற்பத்தி செலவும் குறைவாக அமையும் எனவும் தெரிவித்திருந்தார்.

குறித்த நெற்செய்கையில் ஈடுபட்ட திரு க. வேதநாயகம் தனது அனுபவ பகிர்வில் பரசூட் முறை செய்கையில் நாற்றுக்களை தயார்செய்தல் கடினமாக அமைந்ததே தவிர விதைத்தல் இலகுவாக இருந்தது எனவும் களைகள் கட்டுப்பாட்டிற்பாட்டிற்கு எவ்வித நடவடிக்கையும் தனக்கு தேவைப்படவில்லை எனவும் கூறினார். இதனால் உற்பத்தி செலவானது ஏக்கருக்கு ரூபா 10,000 முதல் ரூபா 15,000 வரையில் மீதப்படுத்த முடிந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த பகுதி விவசாய போதனாசிரியரால் பரசூட் முறை செய்கை பற்றிய மேலதிக  விளக்கங்களை வழங்கியதுடன் அரிப்பு பகுதி விவசாய போதனாசிரியரால் தமது பிரதேசத்தில் பரசூட் செய்கையில் கிடைக்கப்பெற்ற அனுபவங்களை கலந்து கொண்ட விவசாயிகளுடன் பகிர்ந்துகொண்டிருந்தார்.