சிறுபோகம் 2025 இல் வயல் நிலங்களில் பரவலாக களை நெல் இனங்காணப்பட்டதனை அடுத்து 23.06.2025 – 27.06.2025 ஆகிய தினங்கள் விவசாயத் திணைக்களத்தினால் களை நெல் கட்டுப்பாட்டு வாரமாக அறிமுகப்படுத்தப்பட்டு நாடளாவிய நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பல்வேறுபட்ட பயிற்சி வகுப்புக்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள், மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந் நிகழ்ச்சித் திட்டம் வடக்கு மாகாணத்திலும் நடை பெற்று வருகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் புளியம்பொக்கணை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் நெற் பயிற்செய்கையில் பன்றி நெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது 23.05.2025 அன்று காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி.சோ.விஜயதாசன் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிலைய பிரதி பணிப்பாளரும் அதனைச்சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன், பரந்தன் நெல் ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர். மேற்படி நிகழ்வானது ப.அர்த்தனன் என்பவரின் வயலில் பன்றிநெல்லை இனங்காணுதலில் தொடங்கியதோடு இதன் தொடர் நிகழ்வானது புளியம்பொக்கணை விவசாய விரிவாக்கல் நிலையத்திலும் இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்தில் தோணிக்கல் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் தாண்டிக்குளம் கிராமத்தில் 25.06.2025 அன்று பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டு பரந்தன் நெல் ஆராய்ச்சி நிலையத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் திருமதி. N. பவித்திரா அவர்களால் நடாத்தப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நெல் ஆராய்ச்சியாளர் அவர்கள் இது தொடர்பில் பூரண விளக்கங்களை விவசாயிகளுக்கு வழங்கியிருந்ததுடன் இந் நிகழ்வில் விவசாயத்திணைக்கள வெளிக்கள உத்தியோகத்தர்கள், விதை நெல் அத்தாட்சிப்படுத்தல் நிலைய உத்தியோகர்தர்கள் போன்றோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
களை நெல்லை இணங்காணலும் கட்டுப்படுத்தலும்
இக் களை நெல்லானது நெல்லின் குடும்பத்தைச் சேர்ந்த பயிராயினும் அது நெற்செய்கையில் களையாக வகைப்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது. இது நெற் பயிரைப்போன்று காணப்படினும் சில உருவவியல் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு இதனை வேறுபடுத்தி இனங்காண முடியும். அதாவது தண்டின் அடிப்பகுதி இளஞ் சிவப்பு அல்லது ஊதா நிறமாகக் காணப்படுதல், நீண்ட கணுவிடை அல்லது கணுக்களுக்கிடயிலான தூரம் அதிகமாகக் காணப்படுதல், கணுப் பகுதிகளில் வேர்கள் காணப்படுதல், நெற் பயிரை விட அதிகளவு வளர்ச்சியை காண்பித்தல், நெற் பயிரை விட விரைவாக முதிர்ச்சியடைதல், நெல் மணிகள் தொட்டதும் உதிர்வடைதல், மென் பச்சை மற்றும் கரடுமுரடான கொடியிலையைக் கொண்டிருத்தல் மற்றும் நெல் மணிகளில் நீட்டங்கள் காணப்படுதல் என்பவற்றை வைத்து இக் களை நெல்லினை இலகுவில் அடையாளம் காண முடியும்.
நெற் பயிரைப் போன்றல்லாது இக் களை நெல்லானது அதிகளவு உறங்கு நிலைக் காலத்தைக் கொண்டிருப்பதால் (கிட்டத்தட்ட 5 வருடங்கள்) தகாத காலங்களைக் கழித்து வளரக்கூடியது. நெற் பயிருடன் நீர், கனியுப்பு, சூரிய ஒளி மற்றும் வாழிடத்திற்குப் போட்டியிட்டு நெற் பயிரின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றது. அறுவடைத் தருவாயில் நெல் மணிகளுடன் களை நெல் மணிகளும் கலப்பதனால் விளைச்சலின் தரம் குறைவடைவதுடன் அறுவடை செய்யப்பட்ட நெல்லானது விதைநெல்லாக பயன்படுத்த முடியாது போகின்றது. இதனால் விவசாயிகளுக்கு பாரியளவில் நட்டம் ஏற்படுகின்றது.
இதனால் களை நெல்லினை ஆரம்ப காலத்திலே இனங்கண்டு கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும். களை நெல்லினைக் கட்டுப்படுத்த விவசாயத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்றிணைந்த களைக் கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றுதல் வேண்டும். களை நெல் அதிகமாகக் காணப்படும் போது சர்வ களைநாசினி ஒன்றைப் பிரயோகித்து பின்னர் சட்டிக் கலப்பபையினால் வயலை உழுதல் வேண்டும். பின்பு உழுத நிலத்தின் 1/3 பங்கிற்கு 10 தொடக்கம் 14 நாட்களிற்கு நீரைத் தேக்கிவைத்தல் வேண்டும். பின்னர் மீண்டும் உழுது மட்டப்படுத்தி பயிரை ஸ்தாபிக்க முடியும். பயிரை பரசூட் அல்லது நாற்று நடுகை முறைகளின் மூலம் ஸ்தாபிப்பது சிறந்தது. புழுதி விதைப்பாயின் வரிசையில் விதைப்பது விரும்பத்தக்கது. இதனால் களையினை களை கட்டும் கருவிகள் அல்லது மனித வலுவினைப் பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும். களை நெல்லானது பாற்பருவத்தினை எட்டின் அதன் நெல் மணிகளை குளுபோசினேற் அமோனியம் கொண்ட துணியினால் தடவுவதன் மூலம் களை நெல்லினை அழிவடையச் செய்ய முடியும்.