கிளிநொச்சி மாவட்ட விவசாய திணைக்களத்தின் கீழ் உள்ள வன்னேரிக்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் புதிய தொழில்நுட்ப முறையிலான நெல் செய்கை தொடர்பான வயல் விழா நிகழ்வானது 31.01.2025 அன்று காலை 11.00 மணியளவில் பெரிய நீர்ப்பாசனக்குளமான வன்னேரிக்குளத்தின் கீழ் ம.தவக்குமார் என்பவரின் வயலில் விவசாயப் போதனாசிரியர் திரு.சி.டிறியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ் வயல் விழா நிகழ்வில் புதிய தொழில்நுட்ப முறைகளான வரிசையில் விதைகள் இடல் இயந்திர நாற்று நடுகை மற்றும் வழமையான சேற்று விதைப்பு தொழில்நுட்பங்களை விருந்தினர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையை மாவட்ட செயலாளர் திரு.ச.முரளிதரன் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் இவ்வாறான தொழில்நுட்பங்களை வரவேற்பதுடன் தொடர்ச்சியாக ஏனைய விவசாயிகளும் பின்பற்ற வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து வட பிராந்திய விவசாய ஆராட்சி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் திரு.S.ராஜேஸ்கண்ணா அவர்கள் தனது உரையில் இயந்திர நாற்று நடுகை தொழில் நுட்பங்கள் தொடர்பாக விளக்கமளித்தார். தொடர்ந்து மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி.S.விஜயதாசன், கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன பொறியியலாளர் திரு.ரிஷியந்தன் ஆகியோர் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்தனர் மேலும் இத்திட்டத்திற்கான நிதி அனுசரணை வழங்கிய காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன திட்டத்தின் பிரதித்திட்டப் பணிப்பாளர் அவர்கள் திட்ட செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்தார் இந் நிகழ்வில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன திட்டத்தின் உத்தியோகத்தர்கள். பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.