முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்டுவான் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் (CSIAP) கீழ் 70 ஏக்கர் விஸ்தீரணத்திற்கான நிலக்கடலை விநியோக நிகழ்வு 14.05.2020 ஆம் திகதி ஒட்டிசுட்டான் இளைஞர் விவசாயக் கழகத்தில் தண்டுவான் விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்கான தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு.சி.சுரேன் அவர்களின் தலைமையில் மு.ப.11.00மணிக்கு இடம்பெற்றது.
யாலா 2020 காலத்திற்க்கு 80 பயனாளிகளிடையே 70 ஏக்கருக்கு 2800 கிலோ நிலக்கடலை விதைகள் விநியோகிக்கப்பட்டன. இந் நிகழ்வின் போது 5 கிராஅலுவலர் பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் சிறு குழுக்களாக உருவாக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் 20 விவசாயிகள் ஒரு உற்பத்தியாளர் அமைப்பாக செயல்படுகின்றனர்.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பூ.உகநாதன் அவர்கள் தனது உரையில் இத் திட்டத்தின் கீழான பயனாளிகள் 20 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வோர் உற்பத்தி நிறுவனங்களாகத் தொழிற்படும் வகையில் பயிற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருகின்றனர். இவ் வகையான உற்பத்தி நிறுவனங்களின் உருவாக்கத்திற்கான நோக்கம் எதிர் காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான மறு வயற் பயிர்களிற்கான விதைத் தேவையில் தண்டுவான் விவசாயப் போதனாசிரியர் பிரிவு ரீதியாகப் பங்களிப்புச் செய்வதேயாகும். ஒவ்வோர் குழுவிற்கும் தலைவராக அனுபவமுள்ள விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் தலைமைத்துவத்துடன் வினைத்திறனான செயற்பாடுகள் இனி வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன எனத் தெரிவித்தார். மேலும் தொடர்பாடல் தொழினுட்ப வளர்ச்சியினை எமக்கு சாதாகமாகப் பயன்படுத்தவேண்டியதன் அவசியத்தினை விளக்கியதுடன் அதன் ஒரு பகுதியான சமூக வலைத்தளமான வற்ஸ்அப் மற்றும் வைபரில் இக் குழுவினரை இணைத்து விவசாயப் போதனாசிரியரினால் தொழில்நுட்ப ஆலோசனைகளினை வழங்குவது இலகுவாக அமையும் எனவும் தெரிவித்தார்.