நிலக்கடலை விதை வழங்கும் நிகழ்வு

PEISEIP திட்டத்தின் கீழ் பாவற்குளம் பகுதியிலிருந்து நிலக்கடலை விதை உற்பத்தித் திட்டத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு நிலக்கடலை விதை வழங்கும் நிகழ்வு 22.11.2019 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்டது.  PEISEIP திட்டமானது வவுனியா மாவட்டத்தில் பாவற்குளம், ஈரற்பெரியகுளம் மற்றும் முகத்தான் குளம் போன்ற பெரிய நீர்ப்பாசனக் குளங்களை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக விவசாய உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் வினைத்திறனான நீர் முகாமைத்துவத்தினூடாக நீர் வளத்தை பாதுகாத்தல்  போன்றன காணப்படுவதுடன் விவசாயத் திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழ் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இத் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 62 பயனாளிகளுக்கு ஏக்கருக்கு 40 kg என்ற வீதத்தில் அவர்களது பயிர்ச்செய்கை நிலத்துக்கேற்ப நிலக்கடலை விதைகள் வழங்கப்பட்டன.

நிலக்கடலையானது ஒரு எண்ணெய் விதைப் பயிராயினும் இது இலங்கையில்; தின்பண்டங்களாகவே அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இது இலங்கையின் வரண்ட மற்றும் இடைநிலை வலயங்களில் மழைநீரை நம்பி அல்லது நீர்ப்பாசனத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டுவருகின்றது. விதையானது ஒரு உழவு மற்றும் 2 அல்லது 3 பண்படுத்தலைத் தொடர்ந்து 45cm X 15cm இடைவெளியில் நடுகை செய்யப்படுகிறது. பதியவளர்ச்சி மற்றும் இனப்பெருக்க வளர்ச்சியைத் தூண்டும் முகமாக யூரியா 65 kg/ ha (இரு தடவைகளில்)  TSP 100 kg/ha மற்றும்  MOP 75 kg/ha என்ற வீதத்தில் பசளைகள் பிரயோகிக்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக நிலக்கடலை மணிகளின் பூரண நிரம்பல் மற்றும் விளைச்சலை அதிகரிக்க ஜிப்சம் பயன்படுத்தப்படுகிறது. நடுகைசெய்யப்பட்டதிலிருந்து 90 – 100 நாட்களில் அறுவடையை எட்டமுடிவதுடன் சராசரி விளைச்சலாக ஹெக்டேயருக்கு 2500 – 2700 கிலோகிராம் பெறமுடிகிறது. இப் பயிரானது சிறுபோகத்தில் நீர்ப்பாசனத்தின் கீழ் வயல் நிலங்களில் செய்கைபண்ணப்படுகின்றது.

மேலும் PEISEIP திட்டத்தின் கீழ் பாரம்பரிய விதை நெல் உற்பத்தி, உழுந்துச் செய்கை மற்றும் சோளச் செய்கை போன்றனவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.