வடமாகாணத்திற்குட்பட்ட திணைக்களங்களின் நிதி முகாமைத்துவ நடைமுறைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று, வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில், வடக்குமாகாண ஆளுநர் செயலகத்தில் 18 நவம்பர் 2020 அன்று நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் திணைக்களங்களில் நிதி முகாமைத்துவ நடைமுறையில் உள்ள குறைபாடுகள் மற்றும் அவை ஏற்படுவதற்கான காரணங்கள் தொடர்பாக விரிவாக கவனம் செலுத்தப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், திணைக்களங்களின் நிதி முகாமையில் உள்ள நடைமுறைச் சிக்கலுக்கு தீர்வாக (Centralized Financial Monitoring System- Oneline) மையப்படுத்தப்பட்ட இணையவழி நிதிக்கட்டுப்பாட்டு செயன்முறை ஒன்றை உருவாக்கி அதனூடாக நிதிப்பரிமாற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும்படி அறிவுறுத்தினார். அத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள நிதிப்பரிமாற்ற முகாமை செயற்பாடுகளிலுள்ள குறைபாடுகள், பிரச்சனைகள் தொடர்பான அறிக்கை ஒன்றை ஒருமாத காலத்தினுள் சமர்ப்பிக்கும்படியும் தெரிவித்தார்.
மேலும் அனைத்து திணைக்கள செயலாளர்கள் மற்றும் கணக்காளர்களும் கடமைப் பட்டியலுக்கமைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறதா? என்பதுடன் நிதி முகாமைத்துவ செயற்பாடுகளையும் மேற்பார்வை செய்து உறுதி செய்து கொள்ளுமாறும் வலியுறுத்தியதுடன், குறித்த உத்தியோகத்தரின் கடமைகளை ஒதுக்கீடு செய்யும் போது அவ் உத்தியோகத்தரின் அனுபவம், கடந்த கால வேலையின் தன்மை என்பவற்றை கருத்திற் கொள்ளுமாறும் கௌரவ ஆளுநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
கல்வித்துறையில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பில், பாடசாலைகளில் மலசலகூட வசதிகளை சீர் செய்வதற்காக ஒரு குழுவை அமைக்கும்படியும், அதனை சுத்தம் செய்தல் (Maintain expences) செலவை ஈடு செய்வதற்காக, மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து சிறுதொகை அறவீடு ஒன்றை பெற்று அதனை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.
அத்துடன், கிராமப்புற மாணவர்களின் போசாக்கு, உடல் உள ஆரோக்கியம், மற்றும் மாணவர்களின் கண், பல் தொடர்பான ஆரோக்கியம் பற்றி ஆராய்ந்து கவனம் செலுத்தும் படியும் வலியுறுத்தப்பட்டதோடு, மாணவர்களின் கண் தொடர்பான ஆரோக்கிய நிலைமையை ஆசிரியர்களே கண்காணிக்கும் வகையில், ஆசிரியர்களுக்கு பிராந்திய வைத்தியர்களால் கண் ஆரோக்கியம் தொடர்பான பயிற்சி ஒன்றை வழங்கி, ஆசிரியர்களே கண்காணித்து, மாணவர்களின் அடைவு மட்டத்தில் கவனம் செலுத்தும் படியும் கௌரவ ஆளுநர் அவர்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில், ஆளுநரின் செயலாளர், பிரதம செயலாளர், அனைத்து துறைசார் திணைக்கள செயலாளர்கள், மற்றும் பிரதம கணக்காளர்கள், கணக்காய்வாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.