நாற்று நடுகை கருவி மூலம் நடுகைசெய்யப்பட்ட நெல்வயல் அறுவடை வயல்விழா

விளைவு அதிகரிப்பை மேம்படுத்துவோம் எனும் நோக்கில் நாற்று நடுகை கருவி மூலம் நடுகை செய்யப்பட்ட நெல்வயல் அறுவடை வயல்விழா 20.3.2019 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் ஆள்காட்டிவெளி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் வண்ணாகுளம் மற்றும் குமனாயன்குளம் ஆகிய நெல் வயல்களில் மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுகூர் அவர்களின் ஏற்பாட்டில் ஆள்காட்டிவெளி விவசாயப் போதனாசிரியர் திருமதி.ளு.து.இமல்டா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும், இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விவசாயப் பொறியியலாளர் திரு.எஸ்.சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். உதவி விவசாயப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள் ,விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் ஆள்காட்டிவெளி விவசாயப் போதனாசிரியர் பிரிவைச் சேர்ந்த விவசாயிகள் முதலானோர் இவ் வயல்விழாவில் பங்குபற்றி பயன்பெற்றனர். நெற்பயிர்ச் செய்கையில் வீசி விதைப்பு முறையினை விட நாற்று நடுகை கருவியினைப் பயன்படுத்தி நாற்றுநடுகை செய்யப்பட்ட வயல்களிலிருந்து தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் நன்மைகள் தொடர்பாகவும் பங்குபற்றுநர்கள் கற்றுக்கொண்டனர்.

வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்கள் தனது பிரதம விருந்தினர் உரையில் நெற்செய்கையில் நாற்று நடுகையுடன் மற்றைய சூழல்நேசமான தொழில்நுட்பங்கள் கடைப்பிடிக்கப்படுவதன் அவசியத்தை விளக்கிக் கூறியிருந்தார். மன்னார் மாவட்டத்தில் 2018/2019 காலபோகத்தில் 20,200 ஹெக்ரேயர் (49,294 ஏக்கர்) விஸ்தீரணத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சராசரி விளைச்சல் 4 மெ.தொன் / ஹெக்ரேயர் எனும் நிலையிலுள்ளது. முன்மாதிரிச் செய்கையில் நாற்றுநடும் இயந்திரத்தைப் பயன்படுத்தி நாற்று நடுகை செய்யப்பட்டதுடன், தாழ்நில இயந்திர களைகட்டல் கருவியைப் பயன்படுத்தி களை கட்டுப்படுத்தப்பட்டதுடன், அசோலாவும் வயல்களிற்கு இடப்பட்ட நிலையில் 9.5 மெ.தொன் / ஹெக்ரேயர் எனும் உயர்ந்த விளைச்சல் பெறப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளினாலும் இவ்வாறான உயர்ந்தமட்ட விளைச்சல் பெறப்படும் போது நெல் உற்பத்தியில் மன்னார் மாவட்டத்தின் பங்களிப்பு மிகவும் உயர்ந்த நிலையை அடையும். மேலும் இச் செய்கை முறையில் நோய் பீடைத்தாக்கங்கள் இல்லாதிருந்தமை சூழல்நேசமான விவசாயச்செய்கைக்கு ஒரு உந்துதலாக அமைந்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் அண்மைக் காலங்களில் கபிலநிறத்தத்தியின் தாக்கம் அதிகரித்திருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும் நாற்றுநடுகை செய்யப்பட்ட வயல்களில் இதன் தாக்கம் எதுவும் அவதானிக்கப்படவில்லை. நாற்றுநடும் கருவிகளைப் பாவிப்பதன் மூலம் களைகளை வினைத்திறனாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறினார்.

சிறப்புவிருந்தினர் அவர்கள் தனது உரையில் நெற்செய்கையில் சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தூவல் நீர்ப்பாசனம் போன்ற முறைமைகளின் பயன்பாடு பற்றியும் மற்றும் வினைத்திறனான களைக்கட்டுப்பாடு பற்றியும் எடுத்துக் கூறினார். மேலும் மன்னார் மாவட்டத்தில் வரும் போகத்தில் ஒருசில இடங்களில் சொட்டு நீர்ப்பாசனத்தின் கீழ் நெற்செய்கையை முன்மாதிரித் துண்டங்களாக மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.
வண்ணாகுளத்தில் செய்கையை மேற்கொண்ட விவசாயி எஸ்.கமல் என்பவர் BG370 எனும் நெல்வர்க்கம் செய்துள்ளதாகவும் சாதாரண செய்கையைவிட மட்டங்கள் அதிகரித்துள்ளதாகவும் செலவும் குறைவாக உள்ளதாகக் கூறினார். இவருடைய வயல் அறுவடை மதிப்பீட்டு செயற்பாட்டின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்ட போது 1 ஏக்கருக்கு 130 புசல் வரையில் விளைவு கிடைக்கப்பெற்றது.

அதேவேளை அயலில் உள்ள வேதநாயகம் BG450 எனும் நெல் வர்க்கம் நடுகை செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். அவருடைய வயலும் அறுவடை மதிப்பீட்டு செயற்பாட்டின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டபோது 1 ஏக்கருக்கு 190 புசல் வரையில் விளைவு கிடைத்தது.
எஸ்.கமல் என்பவர் முதல் முறையாகவும், வேதநாயகம் என்பனவர் 3 வது தடவையாகவும் இச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் கூறி தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். கலந்துகொண்ட ஏனைய விவசாயிகள் இச்செய்முறையில் பெரிதும் ஆர்வம் காட்டியுள்ளனர். இவ் அறுவடை விழாவில் 24 அலுவலர்களும் 48 விவசாயிகளும் கலந்து பயனடைந்தனர்.

இவ் வயல்விழாவுடன் இணைந்தவகையில் அலுவலர்களும், விவசாயிகளும் ஆண்டாங்குளத்தில் அமைந்துள்ள பண்ணைப் பெண்கள் சங்கங்களின் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர். திருமதி.சசிகலா Roaster இனைப் பயன்படுத்தி அரிசி மாவினை வறுத்து பொதிசெய்து விற்பனை செய்யும் செயற்பாடுகளை விவசாயிகளுடன் பகிர்ந்துகொண்டார். மோர் மிளகாய் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் இப்பெண்மணி சூரியஒளி உலர்த்தியைப் பயன்படுத்தி உயர்ந்ததரத்திலான மோர்மிளகாயினை உற்பத்தி செய்து கூடிய விலைக்கு விற்பனை செய்வது சிறப்பம்சமாகக் கருதப்படுகின்றது.