‘நல்லாட்சி வள மையம்’ (Good Governance Resource Center) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களால்திறந்து வைக்கப்பட்டது.

கைதடியிலுள்ள வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்துக்குரிய ‘நல்லாட்சி வள மையம்’ (Good Governance Resource Center) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் 11.04.2025 அன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
உலக வங்கியின் நிதி உதவியுடன் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் இந்தக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்துக்கான நினைவுக்கல்லை வடக்கு மாகாண ஆளுநருடன், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவனும் இணைந்து திரை நீக்கம் செய்தனர். அதன் பின்னர் கட்டடத்தை ஆளுநர் திறந்து வைத்தார்.
ஆளுநர் தனது உரையில், சேவையாற்றுவதற்கு பௌதீக வளம் தேவைதான். பௌதீக வளத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ப எமது மனிதவளத்தில் அபிவிருத்தி இருக்கின்றதா? சேவைகளின் தரம் உயர்ந்திருக்கின்றதா? என்ற கேள்வியும் முக்கியமானது. நாங்கள் சேவைக்கு இணைந்த காலத்தில் போக்குவரத்து, மின்சாரம், தொலைத்தொடர்பு என்று எந்தவொரு வசதியும் இல்லை. ஆனால் மக்களுக்கு சிறப்பான சேவைகள் சென்றடைந்தன. இன்று வசதிகள் பல்கிப்பெருகி வளர்ச்சியடைய மக்களுக்கான சேவைகள் தேய்ந்து போயுள்ளன. தனியே அரச சேவையை மாத்திரம் நான் இங்கு குறிப்பிடவில்லை.
எங்கள் அதிகாரிகளிடம் பழிவாங்கும் எண்ணம் அதிகரித்துச் செல்கின்றது. அதிகாரிகளின் தன்முனைப்பும் (Ego) பழிவாங்கும் எண்ணத்துக்கு காரணமாக இருக்கின்றது. உள்ளூராட்சிமன்றங்களின் சில செயலாளர்களிடம்தான் எப்படி பழிவாங்குவது என்பதை நாங்கள் படிக்கவேண்டும். அந்தச் சில செயலாளர்கள் எப்படி பழிவாங்கினார்கள் என்பதை மக்கள்தான் என்னிடம் சொன்னார்கள்.
ஒருவருக்கு எப்படி உதவி செய்யவேண்டும் என்ற மனம் எங்களுக்கு இருக்கவேண்டும். ஏழையைக் கண்டால் இரங்கவேண்டும். ஆனாலும் எங்கள் அதிகாரிகள் சிலர் கல்நெஞ்சுக்காரர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் மாறவேண்டும்.
கௌரவ ஜனாதிபதி அவர்கள் கடந்த புதன்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ‘தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029’ வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதால், அதிகார பொறிமுறையும் விரைவில் சரியான பாதைக்கு திரும்ப வேண்டும். அதற்காக இதுவரையான 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதிகாரிகளின் பொறிமுறை சரியாகாத பட்சத்தில், எதிர்வரும் மே மாதத்துக்குப் பிறகு அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பின்வாங்கப்போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார். எனவே இங்குள்ள அதிகாரிகளும் இனியாவது மாறவேண்டும். நாங்கள் சேவை செய்வது அன்னியருக்கு அல்ல. எமது மக்களுக்குத்தான் சேவை செய்கின்றோம் என்பதை நினைவில்கொள்ளுங்கள், என்றார் ஆளுநர்.
இதன் பின்னர் நினைவாக மரக்கன்று ஒன்றையும் ஆளுநர் அந்த வளாகத்தில் நடுகை செய்தார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலர் அ.சோதிநாதன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணி மற்றும் பயிற்சி செ.பிரணவநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல் சேவை எந்திரி ந.சுதாகரன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல் கிருபாசுதன் ஆகியோர் பங்கேற்றனர்.