யாழ்ப்பாண பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தினரின் ஏற்பாட்டில் மருதனார்மடம் பொதுச்சந்தையில் விவசாயிகள், அலுவலக, பாடசாலை மற்றும் வீட்டுத் தோட்டச்செய்கையாளர்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் சேவையானது 26.03.2019 யாழ் .மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
வீட்டுத்தோட்டங்கள், பாடசாலைத் தோட்டங்கள் மற்றும் அலுவலகத் தோட்டங்கள் என்பவற்றை அமைப்பதற்கும் அவற்றினை மேம்படுத்துவதற்கும் தேவையான உயிர் உள்ளீடுகளை வழங்கும் நோக்குடன் திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் அச்சுவேலியில் அமைந்துள்ள பூங்கனியியல் கரு மூலவள நிலையம் என்பன தமது உற்பத்திகளான பொதிகளில் வளர்க்கப்பட்ட மரக்கறி நாற்றுக்கள், கமுகு, சண்டி, குரோட்டன், புதினா, முசுட்டை, முடக்கொத்தான், கற்றாளை மற்றும் பழ மரகன்றுகள் என்பவற்றை விற்பனை செய்திருந்தன.
பயிர்களின் உற்பத்தி திறன் மற்றும் தரத்தினை அதிகரிக்கும் நோக்குடன் இந்நடமாடும் சேவையில் பயறு, உழுந்து, கௌபி, நிலக்கடலை மற்றும் மரக்கறி பயிர்களின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விதைகள் என்பனவும் விற்பனை செய்யப்பட்டன. விவசாயிகளிற்கு விவசாயம் தொடர்பான மேலதிக தொழில் நுட்ப தகவல்களை வழங்கக்கூடிய விவசாயத்திணைக்களத்தின் வெளியீடுகள் மற்றும் கையேடுகள் (அன்னாசிச்செய்கை, தானியங்கள், டிரகன் பழம், திராட்சை, வாழை, பப்பாசி, மாதுளை, மரக்கறிகள், பதிவைத்தல், தேனீவளர்ப்பு, பலா, அறுவடைக்கு பின்னான தொழில் நுட்பம், பீடைநாசினியாக வேம்பு, காளான் வளர்ப்பு, இழையவளர்ப்பு, பெரியவெங்காயம், றம்புட்டான், மங்குஸ்தான், ஒங்கிணைந்த பீடை முகாமைத்துவம், மண்ணின்றிய பயிர்ச்செய்கை (Hydroponics), தோடை, ஆனைக்கொய்யா, நெல் உற்பத்தி, மறுவயற்பயிர்கள், நில அலங்காரம், மாமரச்செய்கை, பீடைநாசினி சிபாரிசு, இலைமரக்கறி, கொய்யா, சேதன விவசாயம்) என்பனவும் விற்பனை செய்யப்பட்டன.
இந்நடமாடும் சேவையின் இன்னொரு அங்கமாக பயிர்ச்சிகிச்சை முகாம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. பயிர்ச்சிகிச்சை முகாமானது விவசாயிகளிற்கு பயிர்களில் ஏற்படும் நோய், பீடை தொடர்பான விளக்கத்தினையும் அவை எவ்வாறு, எவ்வகையான சூழ்நிலையில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன, அதன் அறிகுறிகள், கட்டுப்பாடு தொடர்பான விளக்கங்களும் தாவர வைத்தியர்களினால் (Plant Doctors) வழங்கப்பட்டன. அத்துடன் பயிரிற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான பரிந்துரையானது எழுத்துருவிலும் கைத்தொலைபேசியில் குறுஞ் செய்தி மூலமாகவும் வழங்கப்பட்டது. இந்நடமாடும் சேவையில் பாதிக்கப்பட்ட தாவர பாகங்களை எடுத்துவந்து காண்பித்த 15 விவசாயிகளிற்கு இச்சேவை வழங்கப்பட்டுள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் இதன் மூலம் தெளிவான விளக்கத்தினைபெற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் வட மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், கிளிநொச்சி விதைகள் மற்றும் நடுகைப் பொருடகள் அபிவிருத்தி நிலைய பிரதி விவசாயப்பணிப்பாளர் திரு.ச.சதீஸ்வரன், திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி கலாநிதி.ரீ.கருணைநாதன், யாழ்ப்பாண விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை நிலையப்பொறுப்பதிகாரி திரு.அ.ரமணிதரன், யாழ்ப்பாணக்கல்லூரி விவசாய நிறுவக கற்கைநெறி இணைப்பாளர் திரு.மு.கந்தசாமி, விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், மாகாண விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள், முன்னைநாள் மாகாண விவசாயஅமைச்சின் செயலாளர் கலாநிதி.எஸ்.ஞானச்சந்திரன் மற்றும் முன்னை நாள் உதவி விவசாயப்பணிப்பாளர் திரு.எஸ்.சின்னத்துரை, பாடசாலைஆசிரியர்கள், பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என இந்நடமாடும் சேவையில் 250 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.