திருமறைக்கலாமன்ற தினத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொணடார்.

திருமறைக்கலாமன்ற தினமும், வைரவிழா ஆண்டின் ஆரம்பமும் கலைத்தூது கலையகத்தில்  செவ்வாய்க்கிழமை மாலை (03.12.2024) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் அங்கு உரையாற்றுகையில், திருமறைக்கலாமன்றத்தின் நிகழ்வுகளை நான் தவறவிடுவதில்லை. திருமறைக்கலாமன்றத்தின் எந்தவொரு நிகழ்வும் தரமானதாகவும் அதன் தனித்துவத்தை பறைசாற்றுவதாகவும் இருக்கும்.
திருமறைக்கலாமன்றத்தின் நிறுவுனர் மறைந்த அருட்தந்தை மரியசேவியர் அடிகளார் அவர்களின் ஆளுமையும் தலைமைத்துவப் பண்பும்தான், இந்த நிறுவனத்தின் எழுச்சிக்கு காரணம். மரியசேவியர் அடிகளார் அவர்களின் நல்ல எண்ணமும், சிந்தனையும்தான் இந்த நிறுவனத்தை இன்று விரிவாக்கி வளர்த்துவிட்டிருக்கின்றது. நல்ல எண்ணம் சிந்தனையுடன் எதை ஆரம்பித்தாலும் அது வெற்றியிலேயே முடிவடையும். அதற்கு சிறப்பான உதாரணம் இது.
மரியசேவியர் அடிகளார் அவர்கள் மறைந்த பின்பும் திருமறைக்கலாமன்றம் தரமான ஆற்றுகைகளை எமது சமூகத்துக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
இன்றைய எமது சமூகம் பண்பாடுகளை மறந்துகொண்டுபோகின்றது. மனிதாபிமானம் என்பது இல்லாமல் போகின்றது. தவறிழைப்பவர்களை தட்டிக்கேட்க முடியாத நிலைமை இருக்கின்றது. தமிழர்களுக்கு உரித்தான பண்பாடு, கலாசாரம் என்பன தடம்மாறிச் செல்லும் இந்தச் சூழலில் அதைக்கட்டிக்காக்கவேண்டிய பொறுப்பு திருமறைக்கலாமன்றம் போன்ற அமைப்புக்களுக்கு உண்டு. திருமறைக்கலமன்றம் வெறுமனே கலைகளைப் பாதுகாப்பது மாத்திரமல்லாது, சமூகசேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றது. அது பாராட்டுக்குரியது. இதை தொடர்ந்து அவர்கள் ஆற்றவேண்டும் என வாழ்த்துவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பிரதேச செயலர் சா.சுதர்சன் அவர்கள் பங்கேற்றார். இந்த நிகழ்வில் கலைஞர்களுக்கு விருது வழங்கி ஆளுநர் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
04.12.2024