டெங்கு நோய் கட்டுப்பாடு தொடர்பான மாகாண மட்ட கூட்டம்

டெங்கு நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்குடன் மாகாண ரீதியிலான டெங்கு நோய் கட்டுப்பாட்டு கலந்துரையாடல் 25.09.2025 காலை 9.00 மணிக்கு பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன் அவர்கள், கூட்டத்திற்கு வருகை தந்தவர்கள் மற்றும் நிகழ்நிலை  மூலமாக கலந்துகொண்டவர்கள் அனைவரையும் வரவேற்றதுடன், பருவமழை நெருங்கி வருவதால் மாகாண மட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்பாடு தொடர்பில் தயார் நிலையில் இருப்பதுடன் தொடர்ச்சியான கண்காணிப்பு பொறிமுறைகள் குறித்தும் வலியுறுத்தினார். மேலும் பொதுமக்களிற்கான விழிப்புணர்வின் அவசியத்தை வலியுறுத்தியதுடன் உள்ளூர் ஊடகங்கள் மூலமாக தொடர்ச்சியாக விழிப்புணர்வு செயற்பாட்டை மேற்கொள்வதுடன் மாகாணத்தின் பின் தங்கிய பிரதேசங்களிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் மாகாணத்தின் அனைத்து அரச நிறுவனங்களிலும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் அந்தந்த திணைக்கள தலைவர்கள் அதனை கண்காணிக்குமாறும் கேட்டுக்கொண்டார். உள்ளூராட்சி மன்றங்கள் பருவமழை காலங்களில்  தங்களது வழமையான கழிவகற்றல் செயற்பாடுகளிற்கு மேலதிகமாக தீவிரமாக கழிவகற்றல் செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் இது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களிற்கு அறிவுறுத்தி இச் செயற்பாட்டை கண்காணிக்குமாறு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களைக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து இங்கு கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பான முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்வதற்காக மாதாந்தம் மீளாய்வுக் கூட்டத்தை நடாத்துவதெனவும் டெங்கு கட்டுப்பாட்டு செயல்திட்டங்களில் ஈடுபடுபவர்களை உள்ளடக்கி வட்ஸ்அப் செயலி ஊடாக குழுவை உருவாக்குவதாகவும் தெரிவித்ததுடன் வடமாகாணத்தில் டெங்கு நோயை கட்டுப்பாட்டில்  கொண்டுவருவதற்கு அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

அடுத்து, மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் வி. பி. எஸ். டி. பத்திரன அவர்கள் விஞ்ஞான ரீதியான தரவுகளை முன்வைத்து வடமாகாணத்தில் டெங்கு நோயின் பரவல், அதன் தீவிரத் தன்மை, விளைவுகள் மற்றும் மாகாண சுகாதார திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் கட்டுப்பாட்டு பொறிமுறைகள் பற்றியும் விளக்கமளித்தார். மேலும் மாவட்ட ரீதியாக டெங்கு கட்டுப்பாட்டு தொடர்பாக அடுத்துவரும் ஐந்து மாதங்களிற்கான டெங்கு கட்டுப்பாட்டு திட்டம் ஒன்றினை தயாரித்துள்ளதாக தெரிவித்ததுடன் அதன் மூலம் செயற்படுத்தப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்தார். மேலும் பாடசாலைகளில் டெங்கு கட்டுப்பாடு தொடர்பில் மாணவர்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இளம் சமுதாயத்தினர் மத்தியில்  சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவித்ததுடன் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் சுற்றுச் சூழல் அதிகாரசபை என்பன டெங்கு கட்டுப்பாட்டு செயற்திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அரச நிறுவனங்கள் என்பதுடன் அவற்றின் முழுமையான ஒத்துழைப்பானது இச் செயற்பாடு வெற்றிகரமாக நிறைவேற்ற அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

யாழ்ப்பணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களின் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்களால் அந்தந்த மாவட்டங்களின் தற்போதைய டெங்கு பரவல் நிலைமை, அடையாளம் காணப்பட்ட டெங்கு ஆபத்தான பகுதிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்பன தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் கருத்து தெரிவிக்கையில் உள்ளூராட்சி மன்றங்களால் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளும் டெங்கு கட்டுப்பாட்டு செயற் திட்டங்களின் ஒரு பகுதியான கழிவகற்றல் செயற்பாட்டின் போது அநாமதேயமாக வீசப்படும் கழிவுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறையினரின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கப்பெற வேண்டுமென கோரியதுடன் அதன் மூலமாகவே இச் செயற்பாடு வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என கருத்துரைத்தனர்.

அதனைத் தொடர்ந்து முப்படையினர் மற்றும் பொலிசாரால் மாவட்ட மட்டங்களில் செயற்படுத்தப்படும் டெங்கு பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு படைகளின் பலாலி தலைமையக அதிகாரி மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரால் விளக்கமளிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர்கள், அமைச்சு செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், ஆணையாளர்கள்,பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள்,வலயக்கல்விப் பணிப்பாளர்கள், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், பொலிஸ் கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்புடைய  உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.