சைவ சமயத்துக்கு பிணக்குகளைத் தீர்ப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அதிகாரமுள்ள உறுதியான பீடம் அல்லது சபையொன்று உருவாக்கப்பட வேண்டும் -கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

ஏனைய மதங்களுக்கு இருப்பதைப் போன்று, சைவ சமயத்துக்கும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அதிகாரமுள்ள உறுதியான பீடம் அல்லது சபையொன்று உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.

நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளின் முதலாவது குருபூசை வைபவம், சித்திரைத் திருவாதிரை நாளான இன்று (22.04.2026) புதன்கிழமை காலை நல்லை ஆதீனத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்ற வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், குரு மகா சந்நிதானத்தின் நினைவைப் போற்றும் வகையிலான ‘சிறப்பு மலரை’ உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துச் சிறப்புரையாற்றினார். அத்துடன், இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக மறைந்த குரு மகா சந்நிதானத்தின் திருவுருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய கௌரவ ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:

நான் 2015ஆம் ஆண்டு யாழ். மாவட்டச் செயலாளராகப் பதவியேற்ற பின்னர்தான், இரண்டாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளுடன் மிக நெருக்கமாகப் பழகும் நல்வாய்ப்புக் கிடைத்தது. அக்காலப்பகுதியில் ஆலயங்கள் தொடர்பான பல பிணக்குகள் சமூகத்தில் எழுந்து, அவற்றில் சில நீதிமன்றம் வரைகூடச் சென்றிருந்தன. அப்போது அது குறித்துக் குரு மகா சந்நிதானத்துடன் கலந்துரையாடியபோது, ஏனைய மதங்களுக்கு இருப்பதைப் போன்று சைவ சமயத்துக்கும் அதிகாரமுள்ள உறுதியான பீடம் அல்லது சபை ஒன்றின் தேவை இருப்பதை அவர் ஆழமாக வலியுறுத்தியிருந்தார். அந்தத் தேவை தற்போதும் தொடர்வதாகவே நான் கருதுகின்றேன்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் அரசியல் தலைவர்களையும், வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் எமது சமயத்தின் பெயரால் சந்தித்துப் பேசுபவராக இரண்டாவது குரு மகா சந்நிதானமே திகழ்ந்தார். அவரின் மறைவு எமக்குப் பாரியதொரு வெற்றிடத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது. ஆயினும், அந்த இடத்துக்குப் பொருத்தமான ஒருவரை இறைவன் நிச்சயம் கைகாட்டுவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. எம்மிடமுள்ள குறைகளைக் களைந்து, எதிர்காலத்தில் இந்த ஆதீனத்தை நாம் அனைவரும் இணைந்து மென்மேலும் சிறப்பாகக் கட்டியெழுப்புவோம்.

இரண்டாவது குரு மகா சந்நிதானம் அவர்கள் எவ்வித கர்வமுமற்ற, மிகுந்த நற்பண்புகள் கொண்ட ஒருவராகத் திகழ்ந்தார். அனைவரையும் சமமாக மதிக்கின்ற அந்தப் பண்புதான், அவர் அனைவராலும் போற்றப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவர் தமக்கென எதையும் கோரியதில்லை. நாங்களாகவே உணர்ந்து சில வசதிகளைச் செய்து கொடுத்திருந்தோம்.

தற்காலத்தில் சமூக வலைத்தளங்களில் எவ்வித அடிப்படைகளுமின்றிப் பலருக்கும் சகட்டுமேனிக்குச் சேறுபூசுகின்றார்கள். கலாநிதி ஆறு. திருமுருகன் தொடர்பிலும் இவ்வாறான பல அவதூறுகள் அண்மையில் பரப்பப்பட்டிருந்தன. அவர் இவ்வாறான அடிப்படையற்ற அவதூறுகளைக் கண்டு ஒருபோதும் அஞ்சக்கூடாது. எமது சமயத்துக்கு அவர் ஆற்றிவரும் அரும்பணிகளையும் இதனால் கைவிடக்கூடாது.

ஒருவர் நல்ல விடயங்களைச் செய்ய முற்பட்டால், எமது சமூகத்தவர்களே அதில் குறைசொல்லிக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு குறைசொல்பவர்கள் அல்லது சேறுபூசுபவர்கள் தாமே அந்த நற்பணிகளைச் செய்வார்கள் என்றால், நல்லது செய்பவர்கள் தாராளமாக ஒதுங்கிக் கொள்ளலாம். ஆனால், அவர்களும் செய்ய மாட்டார்கள்;. சமூகத்துக்காகச் செய்பவர்களையும் விடமாட்டார்கள். இது எமது சமூகத்தின் மிகப் பெரிய சாபக்கேடாகும். இதனை நாம் மாற்றியமைக்க வேண்டும், என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சமயப் பெரியோர்கள், கல்விமான்கள் மற்றும் பெருமளவான அடியவர்கள் கலந்துகொண்டனர்.