வடக்கு மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பை மேம்படுத்தவும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்தவும் உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், சுற்றாடல் சட்டத் திருத்தங்கள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான அறிவூட்டல் நிகழ்வு நேற்று (16.10.2026) கைதடியில் நடைபெற்றது. சுற்றாடல் அமைச்சு மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுற்றாடல் பிரதி அமைச்சர் அநுர ஜெயக்கொடி, மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, 2026ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சுற்றாடல் சட்டத் திருத்தங்கள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பில் உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக, சுற்றாடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களை உற்பத்தி செய்வோரின் ‘விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளரின் பொறுப்பு’ (Extended Producer Responsibility), நுண் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கழிவு முகாமைத்துவ சவால்களை எதிர்கொள்ளும் நடைமுறைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
சுற்றாடல் சட்டத் திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வை உள்ளூராட்சி மன்றங்களிடையே ஏற்படுத்தி, அவற்றை நடைமுறையில் வினைத்திறனாகச் செயற்படுத்துவதனூடாகச் சுற்றாடல் பாதுகாப்பை வலுப்படுத்துவதே இந்த நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.




