கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி பயிர்ச்செய்கை அறுவடை தொடர்பான வயல் விழா நிகழ்வானது 29.04.2025 அன்று காலை 10.00 மணியளவில் சி.மதன் என்பவரின் களத்தில் தொழில்நுட்ப உதவியாளர் திருமதி.T.துர்க்கா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ் வயல் விழா நிகழ்வில் வெங்காய உண்மை விதை உற்பத்தி பயிர்ச்செய்கை அறுவடை களத்தை விருந்தினர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையை பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.ளு.விஜயதாசன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் வெங்காய உண்மை விதை உற்பத்தி திட்டமானது ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் விவசாயிகள் இச்செய்கைக்கு ஆர்வம் காட்டும் தன்மை குறைவாக உள்ளது எனவும் குமிழ் விதை வெங்காயச்செய்கையுடன் ஒப்பிடுகையில் இதற்கான விதைச் செலவு, போக்குவரத்து செலவு மற்றும் உற்பத்தி செலவுகள் குறைவாக காணப்படுவதாகவும் பூச்சி நோய்த்தாக்கங்களின் அளவு குறைவாகவே காணப்படுவதனால் விவசாயிகள் இவ்வாறான பயிர் வர்க்கங்களை பயிரிடுவதன் மூலம் அதிகளவான பலனை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
மறுவயற்பயிர் பாடவிதான உத்தியோகத்தர் திரு.க.பிரதீபன் அவர்கள் சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி பயிர்ச்செய்கை தொடர்பான தொழில்நுட்ப விளக்கங்கள் மற்றும் அதன் நன்மைகள் தொடர்பாக கருத்துரை வழங்கியதுடன் பளை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்கள் சிறப்பு விருந்தினர் உரையை நிகழ்த்தினார்.
மேலும் ஏனைய பாடவிதான உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகளினது கருத்துரைகளுடன் குறித்த நிகழ்வானது இனிதே நிறைவு பெற்றது. இந் நிகழ்வில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் விவசாயிகள், சமூக நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.