சுயநலமாகச் சிந்திக்காது, கிராமத்தின் அபிவிருத்தியில் முனைப்போடு உங்கள் முன்னோர்கள் செயற்பட்டமையால்தான் இன்று இந்தச் சாவல்கட்டு கிராமம் வளர்ச்சியடைந்திருக்கின்றது. உங்கள் கிராமத்தின் ஒற்றுமை என்றென்றும் தொடரவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.
சாவல்கட்டு மகாத்மா சனசமூக நிலையத்தின் 75ஆவது ஆண்டு பவளவிழா நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை மாலை (07.03.2025) நடைபெற்றன.
ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் சனசமூக நிலைய முன்றலில் பவளவிழா நினைவைக் குறிக்கும் வகையில் ‘கேக்’ வெட்டிய பின்னர் பாண்ட் வாத்திய இசையுடன் விழா நடைபெற்ற மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அங்கு மேடை நிகழ்வுகள் நடைபெற்றன.
ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், கடந்த காலங்களில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாக நான் இருந்தபோது இந்தக் கிராமத்துக்கு அடிக்கடி வந்திருக்கின்றேன். இந்தச் சனசமூக நிலையம் 75 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருப்பது சிறப்பானது. இன்று பல சனசமூக நிலையங்கள் இயங்காமல் மூடப்பட்டு வருகின்றன. அப்படியானதொரு சூழலில் நீங்கள் பவளவிழாவைக் கொண்டாடுவது பெருமையானது.
உங்கள் சனசமூக நிலையத் தலைவர்களாலும், ஊர் மக்களாலும்தான் இவ்வளவு தூரம் அபிவிருத்தியடைந்திருக்கின்றது. கிராமத்துக்கு தேவையான அபிவிருத்தியை உங்கள் தலைவர்கள் எங்களை அணுகி கடந்த காலங்களில் பெற்றிருக்கின்றார்கள். இந்தச் சனசமூக நிலையம் கூட அதில் கணிசமான பங்காற்றியிருக்கின்றது. இதில் முக்கியமாக, உங்கள் கிராமத்துக்குத் தேவையான அபிவிருத்தியை மக்கள் ஒற்றுமையாக இருந்து பெற்றிருக்கின்றார்கள். அதே ஒற்றுமை தொடரவேண்டும் என்பதுடன், எதிர்காலத்திலும் உங்களுக்குத் தேவையான விடயங்களைப் பெற்று நீங்கள் இன்னமும் சிறப்பான நிலையை அடையவேண்டும், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில் கடந்த காலங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை ஆளுநர் கௌரவித்தார்.
யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகனன், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் திருமதி சுபாஜினி மதியழகன் உள்ளிட்ட பலர் விருந்தினர்களாக இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.