சாவகச்சேரி சமுதாய அடிப்படை வங்கிக்குரிய காணி தொடர்பாக நீண்டகாலம் நிலவிவந்த இழுபறி நிலையில் கௌரவ ஆளுநர் நேரடியாகச் சென்று கலந்துரையாடல் நடத்தினார்.

சாவகச்சேரியில் சமுதாய அடிப்படை வங்கிக்குரிய காணி தொடர்பாக நீண்டகாலம் இழுபறி நிலவிவந்த நிலையில் அது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை காலை (31.07.2025) நேரடியாகச் சென்று தொடர்புடைய தரப்புக்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

சாவகச்சேரி நகர சபையின் சிறுவர் பூங்காவில் ஒரு பகுதிக் காணியை சமுதாய அடிப்படை வங்கிக்கு வழங்குவதாக கூறப்பட்டிருந்த நிலையில் அந்தக் காணியை ஆளுநர் முதலில் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். அந்தக் காணி சிறுவர் பூங்காவின் தொடர் அபிவிருத்திக்குத் தேவை எனவும், சாவகச்சேரி நகரத்துக்கு அண்மையாக தனங்களப்பு வீதியில் மகிழங்கேணியில் மாற்றுக் காணி வழங்கவும் தயார் என நகரசபை தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி நகரசபையால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாற்றுக்காணி தமக்குப் பொருத்தமில்லை எனவும், தமது வங்கிக்கு ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட சாவகச்சேரி நகரசபையுடன் இணைந்த அரச காணியை மீளவும் ஒப்படைக்குமாறும் சமுர்த்தி மகாசங்க பிரதிநிதிகளால் கூறப்பட்டது.

இரு தரப்பும் காணி தொடர்பான இணக்கத்துக்கு வராத நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பிரச்சினை நீடித்துச் செல்லுவதையும் கருத்திலெடுத்து மக்கள் நலன்சார்ந்தே இரு தரப்பும் செயற்படுவதையும் நினைவிலிருத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, பொருத்தமான மாற்றுக்காணியை சமுர்த்தி மகாசங்கத்தினர் அடையாளப்படுத்தி வழங்கினால் அதனைக் கொள்வனவு செய்து வழங்கத் தயாராக இருப்பதாக சாவகச்சேரி நகர சபை பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி பிரதேச செயலாளர், சாவகச்சேரி நகர சபையினர், சமுர்த்தி திணைக்களத்தினர் ஆகிய மூன்று தரப்பினரையும் பொருத்தமான காணியை அடையாளப்படுத்தி அதனைப் பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை இரண்டு மாதங்களுக்குள் நிறைவுசெய்யுமாறு ஆளுநர் பணித்தார். அத்துடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வங்கிக்கான கட்டடத்துக்குரிய அடிக்கல் நடுகை செய்யப்பட வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், சாவகச்சேரி பிரதேச செயலாளர், யாழ். மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், சாவகச்சேரி நகர சபையின் கௌரவ தவிசாளர், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், சமுர்த்தி மகாசங்க முகாமையாளர், சமுர்த்தி வங்கியின் முகாமையாளர், கட்டுப்பாட்டுச்சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.