சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் அலகு திறப்பு விழா மற்றும் உபகரணங்கள் கையளிக்கும் வைபவம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் அலகு திறப்பு விழாவும் மற்றும் றோட்டறிக் கழகத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்ட சத்திர சிகிச்சை கூடத்துக்கான மருத்துவ உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும் 10.10.2022 அன்று திங்கட்கிழமை ஆதார வைத்தியசாலை வைத்தியர் அத்தியட்சகர் தலைமையில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணத்தின் பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.பந்துலசேன அவர்களும் ஏனைய அதிதிகளாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், தென்மராட்சி அபிவிருத்தி கழக உறுப்பினர்கள், றோட்டறிக் கழக உறுப்பினர்கள், ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர், வைத்தியர்கள் மருத்துவர்கள், தாதியர்கள், தாதிய பயிற்சியாளர்கள், சுகாதார சிற்றூழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களால் கட்டிடத்திற்கான பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்ட நிகழ்வும் புதிய கட்டிடத்தினை சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கும் வைபவமும் ஒருங்கே இடம்பெற்றது. தொடர்ந்து சத்திரசிகிச்சை கூடத்துக்கான மருத்துவ உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றன. யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன் அதிதிகளின் உரைகள் மற்றும் விழா சிறப்புமலர் வெளியீடு ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், 1932 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்வைத்திய சாலையானது பல்வேறுபட்ட சவால்கள் மற்றும் அழிவுகளினை சந்தித்து இன்று வளர்ச்சி நிலையினை அடைந்துள்ளமை பெருமைக்குரிய விடயமாகும். வடமாகாணத்தில் உள்ள 118 வைத்தியசாலைகளில் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவினை தொடர்ந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்டமை சிறப்புக்குரிய விடயமாகும் எனக் குறிப்பிட்ட அவர் இச்சிகிச்சைகள் தொடர்ந்து இயங்குவதற்கு அதற்கான ஆளணியினரை தந்துதவுமாறும் பிரதம செயலாளரிடம் தனது கோரிக்கையினை முன்வைத்தார்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இந்த வைத்தியசாலையானது ஒன்பது தசாப்தங்களுக்கு மேலாக பல்வேறு இடங்களில் இருந்து வரும் மக்களுக்கு சேவை செய்து வருவதாகவும், மருத்துவ சேவைக்குத் தேவையான சத்திர சிகிச்சை மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய றோட்டறிக் கழகத்தினருக்கும் மற்றும் முன்னாள் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய பிரதம செயலாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் சுகாதாரத்துறையில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அவர்களின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது எனவும் தற்காலத்தில் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் இருப்பதனால் சத்திர சிகிச்சைகள் பிரிவு மிகவும் அவசியமான தேவையாக உள்ளது எனவும் குறிப்பிட்டார். மேலும் தற்போதய நிலையினை கருத்தில் கொண்டு இருக்கும் ஆளணியினரை வைத்தே சுகாதாரத் துறைக்கான பணியினை ஆற்ற வேண்டும் எனவும் அதற்கான தீர்வினை விரைவில் பெற்றுத்தருவதாகவும் குறிப்பிட்ட அவர் சுகாதாரம், விவசாயம், மற்றும் கல்வியில் பல்வேறு செயற்திட்டங்கள் இடம்பெறுவதாகவும் அவை சமூக அபிவிருத்திக்கு பெரிதும் உதவி புரிகின்றன எனவும் குறிப்பிட்டார். மேலும் கல்வியின் நிலை பற்றியும் அதற்கான முன்னேற்றங்கள் தொடர்பாகவும் தனது கருத்தை தெரிவித்தார். அத்துடன் பிரதேச ரீதியான முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கு புலம்பெயர் வாழ் மக்களின் உதவி அவசியமானதாகும் எனவும் குறிப்பிட்டதுடன் மருத்துவ சேவைக்குத் தேவையான சத்திர சிகிச்சை மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய றோட்டறிக் கழகத்தினருக்கும் தனது நன்றியினை தெரிவித்தார்.

இக் கட்டிடம் மற்றும் ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வானது அரச நிதியுடனும் அறக்கொடையாளர்களின் பங்களிப்புடனும், மற்றும் வடமாகாண சுகாதார மேம்பாட்டின் அர்ப்பணிப்புடனும், வைத்தியசாலையின் நிர்வாகிகள் ஏனைய உத்தியோகத்தர்கள், சமூக நலன் விரும்பிகள் அனைவரின் பங்களிப்புடனும் இடம்பெற்றன.

இன்றைய காலகட்டத்தில் விபத்துக்கள் மற்றும் சமூக வன்முறைகள் அதிகரித்த நிலையில் பாதிக்கப்படும் மனித உயிர்களை உரிய நேரத்தில் முறையான சிகிச்சையளித்து நிரந்தர அங்கவீனத்திலிருந்தும் ஆபத்திலிருந்தும் பாதுகாப்பது சுகாதார துறையினரின் தலையாய கடமையாகும். உரிய நோக்கங்களை அடையும் பொருட்டு அமைக்கப்பட்ட இவ்விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவானது சிறந்த முறையில் இயங்குவதற்கு பல தரப்பட்ட ஆளணியினரை உருவாக்க சுகாதார துறையினர், மற்றும் உயர் அதிகாரிகள் விரைந்து கவனமெடுக்க வேண்டும் என இவ்விழாவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக இக்கட்டட திறப்பு விழாவிற்கு உழைத்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகூறி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.