சர்வதேச மகளிர் தின நிகழ்வு  வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

‘நாடும், தேசமும் உலகமும் அவளே’ எனும் தொனிப்பொருளில் மார்ச் மாதம் 8 ஆம் திகதி கொண்டாடப்பட்ட மகளிர் தின நிகழ்வு 16 மார்ச் 2021 மாலை 3 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வவுனியா மாவட்ட “ஒரு வங்கி ஒரு கிராமம்” திட்டத்தின் பயனாளிகளுக்கான உதவித் திட்டங்களை வழங்கி வைத்த கௌரவ ஆளுநர் அவர்கள் தொடர்ந்து மாவட்டத்தின் சாதனைப் பெண்களுக்கான விருதுகளை வழங்கி வைத்ததோடு அவர்களின் சாதனைகளை உள்ளடக்கி வெளியிடப்பட்ட காணொளிப் பாடலினையும் வெளியிட்டு வைத்தார்.

வவுனியா மாவட்ட செயலாளரின் வழிநடத்தலில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின நிகழ்வில் கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் பெண்கள் பல பழிவாங்கல்களுக்கு உட்ப்பட்ட போது இதற்கெதிராக குரல் கொடுத்ததாகவும் அதேபோன்று தற்போதுள்ள அரசாங்க அதிபர் அவர்கள் பெண்களின் உரிமைகள் தொடர்பாக மிகவும் கரிசனையுடனும் பொறுப்புடனும் தெரிவித்த கருத்து தொடர்பாக மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கௌரவ ஆளுநர் அவர்கள் தனது வாழ்க்கை பாதையில் எதிர்கொண்டு கடந்துவந்த கரடுமுரடான பாதையின் சவால்களை பகிர்ந்துகொண்டார். அந்த வகையில் இலங்கை நிர்வாக சேவையில் தான் உயர் பதவிகளை பெற்றுகொண்ட போது அதனை எவ்வாறு ஒரு பெண்ணால் சிறப்பாக மேற்கொள்ள முடியுமென கேள்விக்கணைகள் பல தொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களே இன்னமும் தனது நினைவில் இருப்பதாகவும் அவ்வாறான நிலைமைகளே தற்போது தனக்கு இச்சாதனைகளை மேற்கொள்ள தூண்டியதாகவும் தெரிவித்தார். எனவே எங்கே ஒருவருடைய உரிமைகள் மறுக்கப்படுகிறதோ அங்கேதான் சாதனைகள் உருவாக்கப்படுகிறது என்பதற்கு மிகசிறந்த முன்மாதிரியாக தான் உள்ளதாக தெரிவித்தார். அந்த வகையில் பதவிகளில் தனிப்பட்ட வாழ்கையில் மற்றும் சமூகத்தில் பல்வேறு சவால்கள் உள்ளன. எனவே சம உரிமை வேண்டுமென்று கேட்டுவிட்டால் மட்டும் உரிமைகள் இலகுவாக கிடைத்துவிடுவதில்லை. ஒவ்வொருவரும் தமது கடமைகளை சரியாக செய்யும்போது பதவிகளை நீங்கள் தேடி அலைய வேண்டியதில்லை. பதவிகள் உங்களை தேடிவருமென தெரிவித்தார்.

மேலும் அரசியலில் பெண்களின் விகிதாசாரம் மிகக் குறைவாக காணப்படுகின்றமையால் சட்டவாக்கத்தில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. அதேபோன்று அரச காணி சட்டத்தில் குடும்பத்தில் முதலாவது ஆண்மகனுக்கே காணி உரிமை வழங்கப்படுகிறது. பெண்களுக்கான உரிமை மறுக்கப்படுகிறது. மேலும் திருமண பத்திரம் பிறப்பு அத்தாட்சி பத்திரம் என்பவற்றில் கூட பெண்களின் தொழில் நிலை பதிவு செய்யப்படுவதில்லை போன்ற உரிமை மறுக்கப்படும் இடங்களை சுட்டிக்கட்டியதுடன் அரசியலில் பெண்களின் சட்டவாக்க ஈடுபாடு காணப்பட்டாலேயே பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுமென தெரிவித்தார்.

அந்தவகையில் வடமாகாணத்தில் பெண்களின் பிரச்சனைகள் அவற்றிற்கான தீர்வு வழிகளை உள்ளடக்கி பெண்களுக்கான கொள்கை வகுப்பு ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதனை செயற்படுத்த உத்தேசித்துள்ளதென்ற செய்தியை மகிழ்ச்சியுடன் அனைவருடனும் பகிந்துகொண்டார். இந்நிகழ்வில் வவுனியா மாவட செயலகத்தினால் “ஆதர்சி புத்திர்சி” விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட கௌரவ ஆளுநர் அவர்கள்இ குறித்த கௌரவ விருது கிடைக்கப்பெற்றமைக்கு மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகவும் அதற்காக தனது குடும்பத்தினர் சார்பாக நன்றியினை தெரிவித்தார்.

மேலும்இ “ஒரு வங்கி ஒரு கிராமம் ” திட்டத்தினை வவுனியாவில் சிறப்பாக முன்னெடுக்கப்படுவதை பாராட்டி குறித்த விடயத்தை வடமாகாண ஏனைய மாவட்டங்களுக்கும் முன்னுதாரணமாக சமர்ப்பிக்க போவதாகவும் தெரிவித்தார். வவுனியா மாவட்ட அரச அதிபர் மக்களுக்கு மிகவும் அர்ப்பணிப்பான சேவையை ஆற்றுவதற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து வவுனியா மாவட்டத்தில் எந்த இடத்துக்கு சென்றாலும் அங்குள்ள பல்வேறு இன மக்களும் சகோதரத்துவத்துடன் அணுகும் முறை மிகவும் சிறப்பாக தன்னால் அவதானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அதிமேதகு ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் வடமாகாணத்திற்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ள உறுதியளித்துள்ளதாகவும் அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்தின் தேவைகளை நிறைவேற்ற மாகாண சபையுடன் இணைந்து தோளோடு தோள் நின்று உதவுவதாகவும் தெரிவித்து விடைபெற்றார்.

குறித்த நிகழ்வில் ஆளுநரின் இணைப்பு செயலாளர், வடமாகாண மகளிர் அமைச்சின் செயலாளர், மாவட்ட அரச அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட செயலாளர், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர்கள், மகளிர் சிறுவர் பிரிவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , மகளிர் சார் அமைப்புக்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலதரப்பினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.