வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை தாமதமின்றி வழங்கி, அவற்றின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளையும் பிரதேச அபிவிருத்தியையும் உருவாக்க வேண்டும். திட்டங்கள் தொடர்பில் மக்களிடையே காணப்படும் சந்தேகங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு விஞ்ஞானபூர்வமான விளக்கங்களை வழங்கி தெளிவுபடுத்துவது அதிகாரிகளின் பொறுப்பு என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இ.சந்திரசேகர் அவர்களும் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கூட்டாக வலியுறுத்தினர்.
பொதுநல மீன் வளர்ப்பு அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் சன்சக்தி டிரேடர்ஸ் (தனியார்) நிறுவனம் முன்னெடுக்கவுள்ள முதலீட்டுத் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (25.08.2026) செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் இம்மாதம் நடைபெற்ற முன்னைய கலந்துரையாடலில் இத்திட்டம் தொடர்பில் சுமுகமான முடிவு எட்டப்படாத நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்றைய கலந்துரையாடல் நடத்தப்பட்டது. திட்டம் தொடர்பில் முதலீட்டாளர் தரப்பு, சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்கள் மற்றும் பிரதேச நிர்வாகம் ஆகிய தரப்புகளின் நிலைப்பாடுகள் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநரும் அமைச்சரும், முதலீடுகள் வரும்போதுதான் பிரதேசங்கள் பொருளாதார ரீதியாக முன்னேறுவதுடன், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் எனக் குறிப்பிட்டனர். எனவே, சட்டத்துக்கு முரணற்ற முதலீட்டுத் திட்டங்களை தனிப்பட்ட நபர்களின் நிகழ்ச்சி நிரல்களை அடிப்படையாகக் கொண்டு தடுக்க முடியாது என்றும், சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை வழங்குவது அரச நிறுவனங்களின் பொறுப்பு என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஒருசில தரப்பினரின் எதிர்ப்பு, அறியாமை அல்லது பிறரின் தூண்டுதல் காரணமாக மக்களுக்கு பொருளாதார நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு திட்டத்தை கைவிடுவது பொருத்தமானதல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அதேநேரம், மக்கள் முன்வைக்கும் கவலைகளை அலட்சியப்படுத்தாமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விஞ்ஞானபூர்வமான தகவல்களை மக்களுக்கு புரியும் வகையில் தெளிவாக எடுத்துரைத்து, திட்டத்தின் நன்மைகள் மற்றும் தாக்கங்கள் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் மீன்பிடி வளங்கள் குறைந்து வரும் நிலையில், மீன்வளர்ப்பு சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள் எதிர்காலத்தில் மீனவர்களுக்கும் கடற்றொழில் சமூகங்களுக்கும் மாற்று வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கக்கூடியவை எனவும் ஆளுநரும் அமைச்சரும் சுட்டிக்காட்டினர். இதனால் இத்திட்டத்தின் தன்மை, எதிர்பார்க்கப்படும் பயன்கள் மற்றும் விஞ்ஞான ரீதியான அடிப்படைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
இத்திட்டம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையாக, எதிர்வரும் 28ஆம் திகதி ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பருத்தியடைப்பு பகுதியில் பொதுமக்களுடன் மீண்டும் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
அன்றைய தினம் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் நேரடியாகச் சென்று, திட்டம் தொடர்பான தெளிவான மற்றும் விஞ்ஞானபூர்வமான விளக்கங்களை மக்களுக்கு வழங்குவதுடன், திட்டத்தை சட்டரீதியாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஒழுங்குமுறைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு ஆளுநரும் அமைச்சரும் இணைந்து பணிப்புரை வழங்கினர்.
இன்றைய கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் பிராந்தியப் பொறியியலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் மற்றும் சன்சக்தி டிரேடர்ஸ் (தனியார்) நிறுவனத்தின் முதலீட்டாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


