இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டிவோய்ட் மக்கினன் அவர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.
வடமாகாணத்தில் கனேடிய அரசாங்கத்தினால் மேற்கொள்ள கூடியதான அபிவிருத்தி உதவிகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதுடன் கனேடிய அரசாங்கத்தின் ஆசிய விவகாரங்களுக்கான பணிப்பாளரின் இலங்கை வருகை குறித்தும், இவ்வருகையின்போது கனேடிய அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்க கூடியதான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இதேவேளை கௌரவ ஆளுநர் அவர்களுக்கும் இலங்கைக்கான ஈரானின் தூதுவர் முகமது ஸாரி அமிரானி அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (16) மாலை கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் இடம்பெற்றது.
வடமாகாணத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்ற ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் கரிசனைக்கும் தொலைநோக்கிற்கும் அமைய மத்திய மாகாணத்திலிருந்து நிலக்கீழ் குழாய் வழியாக வடமாகாணத்திற்கு குடிநீரினைக் கொண்டுவருவதற்கு ஈரானிய அரசின் உதவி இதன்போது கௌரவ ஆளுநர் அவர்களால் கோரப்பட்டது.
இதற்கு சாதகமான சமிக்கை வெளியிட்ட ஈரானிய தூதுவர், முதற்கட்டமாக இது தொடர்பிலான சாத்தியமான வழிகளை ஆராயும் பொருட்டு இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ஈரானின் மூன்று நிறுவனங்களை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தன்னார்வ ரீதியில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.
– வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு