கொவிட்-19 தொற்றிடர் நிலையில் தொலைக்கல்வியின் போது எதிர்கொள்ளும் இணையவழி சவால்கள்

கொவிட்-19 தொற்றிடர் நிலையில் மாணவர்கள் தொலைக்கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது இணையவழியில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (22.6.2021) மாலை 3 மணிக்கு இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், உதவிச்செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப்பணிப்பாளர், உள்ளூராட்சி ஆணையாளர், கிராமிய அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர், தொலைத்தொடர்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் கல்வித்துறைசார் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இக் கலந்துரையாடலில், மாணவர்கள் இணைய வசதியினை பெறுவதில் எதிர்கொள்ளும் சவால்கள், தொழில்நுட்ப உபகரணங்களை பெறுவதிலுள்ள சிக்கல்கள், ஒரே குடும்பத்திலுள்ள இரண்டிற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே சந்தர்ப்பத்தில் இணையவசதி மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள் தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் தொலைக்கல்வியின் போதனா நடவடிக்கைகளுக்கு பொதுவான மற்றும் பொருத்தமான இடத்தினை தெரிவு செய்து அதற்கான தளபாட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அறிவுறுத்தியதுடன், தேவையான தொலைத்தொடர்பு இணைய வசதிகளை தொலைத்தொடர்பு திணைக்கள அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்குரிய நிதி வசதிகள் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ச்சியான இணையவழிச் செயற்பாடுகளால் மாணவர்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாவதால் அவர்கள் அதீத ஆர்வத்துடன் ஈடுபடும் கவிதை எழுதுதல், சித்திரம் வரைதல் போன்ற செயற்பாடுகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள பணித்ததுடன், ஒவ்வொரு நாளும் அவர்களுக்காக 30 நிமிட யோகா பயிற்சிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். அத்துடன் மாணவர்களின் கண்பார்வை தொடர்பான பிரச்சனைகளை கண்டறிய ஆசிரியர்களுக்கு வைத்தியர் மூலமாக பயிற்சிகளை வழங்கி மாணவர்களின் கண்பார்வை குறைபாடுகளை கண்டறிய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினார்.