கைவினைக் கலைஞர்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைத் திறக்கும் “Crafting Ceylon” வேலைத்திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

நாட்டில் காணப்படும் பொருளாதார பின்னடைவுக்கு முகங்கொடுத்து கைப்பணிக் கைத்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கைப்பணியாளர்களின் உற்பத்திகளுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய அருங்கலைகள் பேரவையினால் 2022ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஏற்றுமதி முன்னிலை உற்பத்தி அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைவாக மாகாணங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆக்கங்கள் ஜனவரி 19ம், 20ம் திகதிகளில் பண்டார ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற தெரிவுக்கு காட்சிப்படுத்தப்பட்டு அதில் முதற்கட்டமாக அகில இலங்கை ரீதியாக 546 ஆக்கங்கள் தெரிவு செய்யப்பட்டன.  இதில் 20 ஆக்கங்கள் எமது வடமாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்படி தெரிவு செய்யப்பட்ட 546 ஆக்கங்களில் முதன் முறையாக தேசிய அருங்கலைகள் பேரவையால் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் கைப்பணியாளர்களுக்கு சிறந்த ஒரு கௌரவத்தினை வழங்கும் முகமாக ‘TOP 100’ என்றகருப்பொருளிற்கமைவாக 100 கைப்பணியாளர்களின் ஆக்கங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மார்ச் 23ம், 24ம் திகதிகளில் பண்டார ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற கண்காட்சி நிகழ்வில் ஜனாதிபதி பங்கு பற்றிய ஆரம்ப நாள் நிகழ்வில் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  இதில் வட மாகாணத்தினை சேர்ந்த 3 கைப்பணியாளர்கள் உள்ளடங்குகின்றனர்.

23ம், 24ம் திகதிகளில் பண்டார ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இல் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 546 ஆக்கங்களும் QR Code மூலமாக முழுவிபரங்களையும் பெற்றுக் கொள்ள கூடிய வகையில் காட்சிபடுத்தப்பட்டதுடன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கொள்வனவாளர்களுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தக் கூடியவகையில் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டது. அத்துடன் இத்தொழில் முயற்சியாளர்களுக்கு குறித்த பொருட்களுக்கான கட்டளைகளும் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.