தொழிற்துறை திணைக்களத்துடன் தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் கைத்தொழில் புடவை திணைக்களம் இணைந்து நடாத்திய கைத்தறி மற்றும் கைப்பணி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு தொழிற்துறை திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் 28.11.2023 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு இராமநாதன் வீதி, கலட்டியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இனிய விருந்தினர்களாக திரு.இ.வரதீஸ்வரன் செயலாளர் உள்ளூராட்சி அமைச்சு வடமாகாணம் அவர்களும், அ.சிவபாலசுந்தரன் மாவட்ட செயலாளர் யாழ்ப்பாணம் அவர்களும், திருமதி அநுரி திலகரட்ண பணிப்பாளர் தேசிய அருங்கலைகள் பேரவை அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
கைப்பணிப் போட்டிகளில் 1ம், 2ம், 3ம் இடங்களைப்பெற்ற 84 போட்டியாளர்களிற்;கு 115 விருதுகளும், கைத்தறிப் போட்டிகளில் 1ம், 2ம், 3ம் இடங்களை பெற்ற 23 போட்டியாளர்களிற்கு 57 விருதுகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தொழிற்துறை திணைக்கள நெசவு நிலையங்களில் தொடர்ச்சியாக 8 வருடங்களிற்கு மேல் பணியாற்றுகின்ற 08 நெசவாளர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். மேலும் சிறப்பு விருதுகளும் , பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கைப்பணித்துறையில் போட்டிக்கு வைக்கப்பட்ட அனைத்து ஆக்கங்களிலும் மிகச் சிறந்த கைப்பணிக்கு தங்க விருது (ரூபா பத்தாயிரம் பெறுமதியான பணப்பரிசு) வழங்கி வவுனியா மாவட்டத்தை சேர்ந்த திருமதி கெ.எமில்திரேசா கௌரவிக்கப்பட்டார்.
கூடுதலான பரிசிற்குரிய ஆக்கங்களை போட்டிக்கு அறிமுகப்படுத்தியமைக்காகவும் கூடுதலான புதிய முயற்சியாளர்களை அறிமுகப்படுத்திய வகையிலும் தொழிற்துறை திணைக்கள நல்லூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ந.ஜெனதன் அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் கைத்தறி நெசவுத்துறையில் சிறந்த வடிவமைப்பாளருக்கான விருது சிறுப்பிட்டி நெசவுப் போதனாசிரியர் செல்வி வைத்திலிங்கம் திருமதிதேவி அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார். கைத்தறி உற்பத்திகளுக்கான சிறந்த நெசவாளர் விருது சிறுப்பிட்டி நெசவாளர் செல்வி பொன்னுத்துறை வினோஜா பெற்றுக்கொண்டார்.
தேசிய ரீதியில் இடம்பெற்ற கைத்தறி போட்டியில் ஆண்களுக்கான ஆடை (வேட்டி, சேட்) வடிவமைப்பிற்காக 2ம் இடத்தினை பெற்றமைக்காக சிறுப்பிட்டி நெசவாளர் செல்வி பொன்னுத்துறை வினோஜா அவர்கள் இந்நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.




















