தெல்லிப்பழை கூட்டுறவு மருத்துவமனையின் சேவை நிலையம் இல. 611, வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை மாலை (11.02.2025) பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், போருக்கு முன்னர் தெல்லிப்பழை கூட்டுறவு மருத்துவமனை மிகச் சிறப்பாக இயங்கியதாகவும் இடப்பெயர்வு காரணமாக அது செயலிழந்து போனதாகவும் குறிப்பிட்டார். மீண்டும் தெல்லிப்பழையில் இயங்கத் தொடங்கியிருந்தாலும் பல பிரச்சினைகளை மருத்துவமனை எதிர்கொண்டதாகவும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.
மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் மருத்துவ நிபுணர் ந.சரவணபவா அவர்கள் தெல்லிப்பழை கூட்டுறவு மருத்துவமனையுடன் இணைந்த பின்னரே, அதன் சேவைகள் சிறப்பாக வளர்ச்சியடைந்ததாகவும் ஆளுநர் தெரிவித்தார். அதேவேளை மக்களுக்கான சேவையை திறம்பட முன்னெடுக்கும் மருத்துவ நிபுணர் ந.சரவணபவா அவர்களை, மக்கள் இன்றும் கடவுளுக்கு நிகராகவே பார்க்கின்றனர் எனவும் புகழாரம் சூட்டினார். அதேபோன்று மருத்துவர்கள் மாத்திரமல்ல அதிகாரிகளும் சேவையாற்றவேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் ந.திருலிங்கநாதன், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் த.கிருஸ்னேந்திரன், யாழ்ப்பாணம் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் சி.சந்திரசேகரன், தெல்லிப்பழை கூட்டுறவு மருத்துவமனைக்கான காணி கொடையாளர் செல்வி தம்பு மகேஸ்வரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.







