ஒற்றுமையான சேவைக்காக பல சந்தர்ப்பங்களில் விட்டுக்கொடுப்புடன் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள் செயற்பட்டன. இதனால் போக்குவரத்துச் சம்பந்தமாக எழுந்த பல பிரச்சினைகள் எங்களால் தீர்க்கக் கூடியதாக இருந்தன. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதரன் தலைமைப் பதவியில் 25ஆண்டுகள் பூர்த்தி செய்தமைக்கான கௌரவிப்பு விழாவும், இணையத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை (26.07.2025) காலை நடைபெற்றது.
பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில் தெரிவித்தாவது, 1995ஆம் ஆண்டு இடப்பெயர்வைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு குடாநாட்டுக்கு நாம் திரும்பினோம். அப்போது தெல்லிப்பழை உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றினேன். எமது அலுவலகம் தனியார் வீட்டில் மல்லாகத்தில் இருந்தது. அப்போது அந்தப் பகுதிக்கு பொறுப்பாக இருந்த பிரிகேடியர், மக்கள் மீளவும் வருவதற்கு என்ன உதவிகள் தேவை எனக் கேட்டார். போக்குவரத்து வசதிகள் ஒழுங்குபடுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என நான் குறிப்பிட்டேன். இதன்போதுதான் கெங்காதரன் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் தெல்லிப்பழை சங்கத்துக்கு தலைவராக இருந்திருக்கவேண்டும். அவர், எரிபொருள் பிரச்சினை இருக்கின்றது என பிரிகேடியரிடம் குறிப்பிட்டார். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு போக்குவரத்துச் சேவை ஆரம்பமாகியது.
அன்று தொடக்கம் இன்றுவரையில் கெங்காதரன் என்னுடன் பயணித்து வருகின்றார். அவர் எப்போதும் எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லமாட்டார். மீள்குடியமர்வு நேரங்களில் எங்களுடன் இணைந்து அந்த மக்களின் மீள்குடியமர்வுக்காக பல்வேறு வகைகளில் போக்குவரத்துச் சேவையை ஒழுங்குபடுத்தித்தந்தவர். அந்த வகையில் அவருக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நான் நன்றி கூறுகின்றேன். தனது சங்க ஊழியர்களின் தேவைகளுக்காக விடாப்பிடியாக நிற்பார். அதேபோல நாங்கள் கேட்கின்ற விடயங்களையும் சங்க ஊழியர்களைக் கொண்டு செய்விப்பார். இதனால் எப்போதும் அவருக்கும் அரசாங்க நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையில் நல்லுறவு இருந்து வருகின்றது.
சரியானதைச் செய்வதற்கு யாருக்கும் பயப்படத்தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடு. குறைசொல்பவர்கள் சொல்லிக்கொண்டிருப்பார்கள். எப்போதும் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. நீதியான – நேரிய வழியில் செல்லத்தவறுபவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கும், குறைகளுக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்றே நான் நினைக்கின்றேன், என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், உதவிப் பிரதம செயலாளர் திருமதி அனெற் நிந்துஸா அன்ரனி டினேஸ், வடக்கு மாகாண பிரதிப் பதிவாளர் நாயகம் ப.பிரபாகர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொதுமுகாமையாளர் ப.ஜெயராஜா, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண ஆகியோர் கலந்துகொண்டனர்.