கிளிநொச்சி மாவட்டத்தில் சேதனப்பசளை மற்றும் சேதன பீடை நாசினி உற்பத்தித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடுகள் வழங்கி வைத்தல்

அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு எனும் செயற்றிட்டத்திற்கமைவாக இரசாயன மற்ற உணவினை மக்களுக்கு வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சேதன பசளை உற்பத்தி திட்டத்தின் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்ட சேதனப் பசளை உற்பத்தியாளர்களுக்கு உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வானது 21.01.2022 அன்று  மாவட்டத்தின் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில்  நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களும், மற்றும் மாகாண விவசாய அமைச்சின் செயலாளார், கிளிநொச்சி மாவட்ட செயலாளர், மாகாண விவசாயப் பணிப்பாளர், திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நஞ்சற்றதும் தரமானதுமான விவசாய உற்பத்திகளைப் பெற்றுக்கொள்வதற்கு சேதன பசளை மற்றும் சேதன பீடைநாசினி  உற்பத்தியினை அதிகரிப்பதற்காக கூட்டெரு உற்பத்திக்கான மூலப்பொருட்களை தூளாக்கும் இயந்திரம், அசோலா வளர்ப்பிற்கான கொள்கலன் மற்றும் பொலித்தீன், மண்புழு உரத் தயாரிப்பிற்கான கொள்கலன், இவற்றுடன் திட்டங்களுக்கான  மானிய காசோலைகளும்  விவசாயிகள் மற்றும் இளம் விவசாய கழகங்களுக்கும்  வழங்கப்பட்டது. மேற்படி திட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 500 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.