கிளிநொச்சி மாவட்டத்தில் சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு செயற்றிட்டம்

வடமாகாண விவசாயத்;திணைக்கள ஏற்பாட்டின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் சேதனப்பசளை உற்பத்தியை விவசாயிகளிடையே அதிகரிக்கும் நோக்குடனான விழிப்புணர்வுச் செயற்பாடானது கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் அவர்களின்  தலைமையில் கிளிநொச்சி பொருளாதாரச்சந்தையில் 15.09.2021 அன்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

விவசாய உற்பத்தியில் இரசாயன பாவனை அதிகரிப்பதன் காரணமாக   விவசாய விளைபொருட்கள் நச்சுதன்மையுள்ளதாகவும், தரமற்றதுமாகவும் காணப்படுகின்றது. இதன்காரணமாக மனித உடலில் பல்வேறு வகையான நோய்களும், பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றமை யாவரும் அறிந்த ஓரு விடயமே. எதிர்கால சந்ததிக்கு நஞ்சற்றதும் தரமானதுமான விவசாய உற்பத்திகளை பெற்றுக்கொள்வதற்கேதுவாக சேதனப்பசளை உற்பத்தியை விவசாயிகளிடையே ஊக்குவிக்கும் ஓரு முயற்சியாக இந்நிகழ்வானது அமைந்துள்ளது.

தற்போது கிளிநொச்சி மாவட்டத்திற்கு இருபத்து மூவாயிரம் மெற்றிக்தொன் சேதனப்பசளை தேவைப்பாடாகவுள்ளது எனினும் பத்தாயிரம் மெற்றிக்தொன் சேதனப்பசளையே உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை இரட்டிப்பாக்கும் நோக்குடனேயே விழிப்புணர்வுச் செயற்பாடானது மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உழவியந்திரத்தில் சேதனப்பசளை மேற்கொள்ளும் முறை தொடர்பான காட்சிகள், சேதனக் கரைசல்கள் மேற்கொள்ளும் முறைகள் மற்றும் சேதனக்கரைசல்கள் காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன்  ஒலிபெருக்கி  மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலமும் விவசாயிகளிடையே சேதனப்பசளை பாவனையினை அதிகரிப்பதற்குகேற்ற வகையில் இவ் விழிப்புணர்வு செயற்பாடானது கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயபோதனாசிரியர் பிரிவுகளிலும்  முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் அலுவலக பாடவிதான உத்தியோகத்தர்கள்,விவசாயபோதனாசிரியர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.