கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இளம் விவசாயிகள் கழகத்திற்கென மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தில் வழங்கப்பட்ட நெல் நாற்று நடும் இயந்திரங்களைப் பயன்படுத்தி செய்முறை ரீதியான முன்மாதிரி (Method Demonstration) நிகழ்வானது 20.04.2021 அன்று காலை 10.00 மணியளவில் கரியாலை நாகபடுவான் இடதுகரை கமக்காரர் பிரிவில் 12ம் வாய்க்கால் பகுதியில் முழங்காவில் விவசாயப் போதனாசிரியர் திரு.ம.மகிலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முன் மாதிரி விவசாயிகளான திரு. செ. திருச்செல்வம், திரு. சி. ஜெயக்குமாரசிங்கம் ஆகியோரின் வயலில் 04 ஏக்கரிற்கான நாற்று நடுகை வயல் விழா இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்திலிருந்து மாவட்ட நெல் தொடர்பான பாடவிதான உத்தியோகத்தர் திரு. சு. ஜெயக்காந்தன் மற்றும் முழங்காவில் கமநல சேவைகள் நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. க. கஜீபன், சக விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் பகுதி விவசாயிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாற்று நடுகையின் போது ஏக்கர் ஒன்றிற்கு 16 கிலோகிராம் விதை நெல் போதுமானதாகும். வீச்சு விதைப்பில் ஏக்கர் ஒன்றிற்கு விவசாயிகளால் சாதாரணமாக 3 புசல் நெல் பயன்படுகின்றது. நாற்று நடுகை மூலமாக விதை நெல் கொள்வனவிற்கு செலவளிக்கும் பணத்தில் மூன்றில் இரண்டு பங்கு மீதமாகின்றது. அத்துடன் நாற்று நடுகையில் களைக்கட்டுப்பாட்டிற்கென தாழ் நில ஊடு களைகட்டி பயன்படுத்த முடியும். இதனால் களை கட்டுப்பாட்டிற்கென ,ரசாயனம் பயன்பாடு குறைக்க முடியும். பயிரிடைவெளியும் போதியளவில் காணப்படுவதனால் நோய் பீடைத் தாக்கம் ஒப்பிட்டளவில் குறைவாகும். நன்கு மட்டம் பெயருவதால் இறுதியில் விளைச்சல் அதிகரிக்கின்றது.
முழங்காவில் மற்றும் சிறீமுருகன் பல்லவராஜன்கட்டு இளம் விவசாயிகள் கழகத்தினால் இந் நிகழ்வில் நாற்று நடுகை செய்யப்பட்டது. ஏக்கர் ஒன்றிற்கு நடுகைக்கான செலவானது ரூபா 5000 ஆக காணப்படுவதுடன் நாள் ஒன்றிற்கு இயந்திரத்தினால் 3 ஏக்கர் நடக்கூடியதாகவும் இருக்கும். கரியாலைநாகபடுவான் குளத்தின் கீழ் இம்முறை இதுவரையில் 11ஏக்கரிற்கான நாற்றுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். நடுகை செய்வதற்கு ஆயத்தமாக உள்ள விவசாயிகளை தொடர்பு கொள்ளுமாறு அலோசனை வழங்கப்பட்டது. உரிய காலத்தில் நீர்ப்பாசனம் கிடைக்கும் பட்சத்தில் சிறுபோகத்தில் நாற்று நடுகை அளவினை அதிகரிக்க முடியும் என விவசாயிகளால் கருத்து முன்வைக்கப்பட்டது.