தேசிய விஞ்ஞான கழகத்தின் நிதி அனுசரனையில் உண்மை விதை உற்பத்தியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளை துல்லியமாக உய்த்தறிவதற்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழப்பாண மாவட்டங்களில் சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்திக்கு பொருத்தமான இடங்களை தெரிவு செய்யும் நோக்குடனும் அதன் பேண்தகு தன்மையினை உறுதிப்படுத்து முகமாகவும் போட்டி ஆராய்ச்சி கொடுப்பனவிற்காக விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய மேலதிக பணிப்பாளரும், கலாநிதி எஸ்.ஜே.அரசகேசரி அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் பேறாக 05/04/2021 ஆந் திகதியன்று கிளிநொச்சி மாவட்டத்தின் கிருஸ்ணபுரம் கிராமத்தில் சின்ன வெங்காய உண்மை விதை அறுவடை விழா இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய மேலதிக பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜே.அரசகேசரி அவர்களும் பிரதி விவசாயப் பணிப்பாளர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், மற்றும் விவசாயிகள், என பலரும் பங்குபற்றியிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கிருஸ்ணபுரம், கனகாம்பிகைக்குளம், புன்னைநீராவி, பளை, கிளாலி, ஜெயபுரம் மற்றும் முழங்காவில் ஆகிய கிராமங்களில் காலபோக செய்கைக்கு பின்னராக கள ஆய்வு மேற் கொள்ளப் பட்டிருந்ததுடன் சுமார் 1.8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கு விதை வெங்காயம் மற்றும் பசளைகளும் செய்கைக்குரிய பயிற்சிகளும் வழங்கி வைப்பட்டிருந்தது. வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்ட குறித்த திட்டத்தின் அறுவடை விழாவானது சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.