கிளிநொச்சி புன்னைநீராவி அ.த.க. பாடசாலையில் அமைக்கப்பட்ட கட்டடம் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது

ஒவ்வொரு பாடசாலைகளினதும் பெறுபேறுகளை அடிப்படையாக வைத்தே எதிர்காலத்தில் அந்தப் பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்களின் இடமாற்றங்கள், பாடசாலை உட்கட்டமைப்பு விருத்திக்கான உதவிகள் என்பனவற்றை வழங்கலாமா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

கிளிநொச்சி புன்னைநீராவி அ.த.க. பாடசாலையில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட 29.75 மில்லியன் ரூபா நிதி உதவியில் அமைக்கப்பட்ட கட்டடம், வடக்கு மாகாண ஆளுநரால் வெள்ளிக்கிழமை (03.01.2025) திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலைக்கு ஒன்றுகூடல் மண்டபம் அவசியமாக இருப்பதாக வலயக் கல்விப் பணிப்பாளரால் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், கிராமப்புற பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதே எங்களின் பிரதான இலக்காக இருக்கின்றது என்று குறிப்பிட்டதுடன், அதன் ஊடாக கிராமப்புற மாணவர்களும் தமது பிரதேசத்தில் சிறப்பான கல்வியைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார். அத்துடன் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்தியமைக்காக ஆளுநர் பாடசாலை சமூகத்தினரைப் பாராட்டினார்.
மாணவர்கள் கல்வியில் சிறப்பான நிலையை அடைவது மாத்திரமல்ல, ஏனையோருக்கு உதவி செய்யும் குணத்தையும் வளர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார். மேலும் எங்களால் செய்ய முடியாது என்ற ஒன்றில்லை எனக் குறிப்பிட்ட ஆளுநர், அக்கறையும் ஆர்வமும் இருந்தால் எதையும் செய்து காட்ட முடியும் என்பதை அனைவரும் நினைவில்கொள்ளவேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கந்தையா பிரட்லி ஜெனட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.