முதலீடு இல்லாமல் எமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. எமது மாகாணத்தை நோக்கி வருகின்ற முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்குகின்ற நிறுவனங்கள் நேர்சிந்தனையுடன் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.
கிளிநொச்சி நகரிலுள்ள கிளிநொச்சிக்குளத்தை மையப்படுத்தியதாக ‘எஸ்.வை. நிரோ கிளி வேள்ட்’ சுற்றுலா மையம் 12.03.2025 அன்று புதன் கிழமை வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர்,
வடக்கு மாகாணத்துக்கு பெருந்தொகை வேலை வாய்ப்பு தேவைப்படுகின்றது. அதைப் பூர்த்தி செய்யும் வகையில் வடக்கில் தொழில் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கும் நோக்குடன் வடக்குக்கு வரும் முதலீட்டாளர்களை, அவர்கள் இங்கும் முதலிடக்கூடிய சூழலை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். இதனுடன் தொடர்புடைய அரச நிறுவனங்கள் அத்தகைய எண்ணத்தில் செயற்பட வேண்டும்.
எமது பிரதேசத்தில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அதை எதிர்ப்பது வழக்கமாகிவிட்டது. பேரம்பேசும் ஆற்றல் எம்மக்களிடத்தில் இல்லை. அபிவிருத்தித் திட்டமும் வரவேண்டும், அந்த மக்களின் கோரிக்கைகளும் நிறைவேறவேண்டும். இரண்டையும் ஒருசேர நிறைவேற்ற பேரம்பேச வேண்டும். அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது மிகக்குறைந்தளவு சூழல் பாதிப்பு இருக்கக்கூடும். அதையும் நாம் கருத்திலெடுக்கவேண்டும்.
இந்த சுற்றுலா மையத்தின் நிறுவுனர் இளம் முதலீட்டாளர். அவரை நான் ஊக்குவிக்கின்றேன். இவ்வாறானவர்கள் எமது மண்ணில் முதலீடுகளை மேற்கொண்டு எம்மவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கவேண்டும். இன்றைய தொழில்முயற்சி நாளை பெரு விருட்சமாக மாறுவதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், வடக்கு மாகாண நீர்பாசனப் பொறியியலாளர், கரைச்சிப் பிரதேச செயலர், கரைச்சிப் பிரதேச சபைச் செயலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.