கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத் தொகுதிகள் 14.07. 2021 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த கௌரவ ஆளுநர் அவர்கள் யா/திக்கம் சித்தி விநாயகர் வித்தியாலயம், கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம் மற்றும் யா/கட்டைவேலி மெ.மி.த.க பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத் தொகுதிகளை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இங்கு கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், வட மாகாணத்தில் கல்வி என்பது மிகவும் முக்கியமான விடயம் என்பதனை சுட்டிக்காட்டியதுடன் எதிர்கால சந்ததியினரின் வாழ்வியலுக்கு முக்கியமானதாக இருக்கும் கல்வி மற்றும் குடும்பங்களின் வாழ்வுக்கு ஆதாரமாக அமையும் விவசாயத் துறைகளில் புரட்சிகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்த மேன்மைதங்கிய ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் பேரில் பல்வேறு கருத்திட்டங்களையும் அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி செய்யப்படுவதன் நோக்கமானது மாணவர்கள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக விளங்கி நாட்டிலே நற்பிரஜைகளாக வாழ வேண்டும் என்பதாகும் என தெரிவித்ததுடன் பல்வேறு நிதி மூலங்களின் ஊடாக கிராமப்புற பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் இளைய சமுதாயத்தினர் விழுமியங்களையும் பண்புகளையும் தொடர்ந்து பின்பற்றுபவர்களாகவும் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக உருவாக்குவதற்கும் பிரதேச பெரியவர்கள் ஆசிரியர்கள் மற்றும் சமூகம் சார்ந்தவர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். குறித்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் வடமாகாண கல்விப் பணிப்பாளர், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடமராட்சி கல்வி பணிப்பாளர், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.