கிராமிய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதனூடாக தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 17 மார்ச் 2021 அன்று மாலை 2.00 மணிக்கு யாழ் மாவட்ட அரச அதிபர் க. மகேசன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.
குறித்த கலந்துரையாடலில் கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், கௌரவ கடற்தொழில் அமைச்சர், வர்த்தக கைத்தொழில் அமைச்சர், கௌரவ பெருந்தோட்ட அமைச்சர் , போக்குவரத்து இராஜாங்க அமைச்சர், வடமாகாண பிரதமசெயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்பு செயலாளர் , அமைச்சுக்களின் செயலாளர்கள் , யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் துறைசார் திணைக்கள தலைவர்கள் , பிரதேச சபை உறுப்பினர்கள் , பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
இக் கலந்துரையாடலில் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் உள்ளுர் உற்பத்திகளை அதிகரிக்கும் கைத்தொழில் , கடற்தொழில் மற்றும் பெருந்தோட்டத் துறைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. போக்குவரத்து சபை ஊழியர் பற்றாக்குறையினால் சேவை சீரின்மை மற்றும் அவை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டமைக்கு பதிலளித்த கௌரவ இராஜாங்க போக்குவரத்து அமைச்சர் குறித்த விடயம் தொடர்பில் ஒரு குழுவினை அமைத்து நேரில் உரிய இடங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.
தொடர்ந்து கடற்தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு பதிலளித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இந்திய இழுவைப்படகு தொடர்பான பிரச்சினைக்கு ஓரிருமாதங்களில் தீர்வு வழங்கப்படுமெனவும் கடற்றொழிலாளர்களுக்கென விரைவில் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள கட்டளைச் சட்டத்தின் மூலம் அனைத்து கடற்றொழிலாளர்களுடைய பிரச்சினைக்கும் தீர்வு காணப்படுமென உறுதி வழங்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ வடமாகாண ஆளுநர் அவர்கள் வடமாகாணத்தில் பல்வேறு கைத்தொழில் நடவடிக்கைகளுக்கான கட்டடங்கள் பயன்பாடற்று இருப்பதாகவும், குறிப்பாக அச்சுவேலி கைத்தொழில்ப்பேட்டையின் சில பகுதிகள் இவ்வாறு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் வசதி வாய்ப்புக்கள் அனைத்தும் தயார் நிலையில் இருந்தும் அவற்றை உரிய வகையில் பயன்படுத்த யாரும் முன்வருவதில்லை என குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் குறிப்பிட்டதொரு கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகளை மேற்கொள்ள இடையூறு விளைவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் கேள்வி எழுப்பியபோது குறித்த விடயத்திற்கு கௌரவ வடமாகாண ஆளுநர் அப் பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றி ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்வதாக தெரிவித்தார்.
பனை சார் உற்பத்திப்பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் விரிவாக்கல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. மஞ்சள், இஞ்சி, வெற்றிலை மற்றும் பாக்கு போன்ற உற்பத்திகளை வடமாகாணத்தில் மேற்கொள்ளல் சிறந்ததாக அமையுமென கௌரவ பெருந்தோட்ட அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டது மேலும் சிறு கைத்தொழில் மேற்கொள்வதற்கு ஒவ்வொரு பிரதேச செயலகமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.