கல்வி அமைச்சர் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் வெகுவிமர்சையாக நடைபெற்ற தேசிய தொழிற்றகமை சான்றிதழ் வழங்கும் விழா.

கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க வடக்கு மாகாணத்தின் விவசாய திணைக்களம், கைத்தொழில் திணைக்களம், மீன்பிடி அலகு போன்றவற்றால் நடாத்தப்பட்ட தேசிய தொழிற்றகமை சான்றிதழ் பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்தவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் விழா வடமாகாண பிரதம செயலாளரின் தலைமையில் 2023.10.10 அன்று சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்திலே நடைபெற்றது. இந்நிகழ்விலே கல்வி அமைச்சர் கலாநிதி. சுசில் பிரேம ஜெயந்த, மீன்பிடித்துறை அமைச்சர் திரு.டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை அவைத்தலைவர், பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், இலங்கைக்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதி, அரசாங்க அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்விலே 570 பயனாளர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டார்கள்.

இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்விலே கலந்து கொண்ட அதிதிகள் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததுடன் இந்த பயிற்சிநெறிகளின் அனுபவங்களைக்கொண்டு தொழில் முனைவுகளில் ஈடுபட வேண்டும் என்றும் கூறியிருந்தனர். மேலும் கல்வி அமைச்சர் அவர்கள் எமது கல்வித்திட்டங்களில் காலத்திற்கேற்பவும் எமது தேவைகளுக்கேற்பவும் கல்வி முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வருவதாகவும் 2027 இல் முழுமையாக கல்விமுறை நவீனமயப்படுத்தப்படும் எனவும் கூறியிருந்தார். அத்தோடு ஆசிரிய சேவையை மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டம் ஆகிய துறைகளைப் போல தொழிற்றகமையுடைய சேவையாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை செய்துவருகின்றோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.