சவால்மிகுந்த, போட்டிதன்மையான தற்காலத்தில் கல்வித் தகைமையுடன் தொழில் தகைமையும் இருந்தால் மட்டுமே வாழ்வில் வெற்றியடைய முடியும் என வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் இன்று நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே கௌரவ ஆளுநர் இதனை குறிப்பிட்டார்.
வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் நடாத்தப்படும் மனைபொருளியல் டிப்ளோமா சான்றிதழ் பயிற்சி நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 257 மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் இன்று நடைபெற்றது. வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், வட மாகாண பிரதம செயலாளர், வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் , ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வின் பிரதம அதிதிக்கான உரையை நிகழ்த்திய வட மாகாண ஆளுநர், தொழில்கல்வியின் முக்கியத்துவம் குறித்து தெளிவுப்படுத்தினார். பல்தேசிய போட்டிதன்மையான நிறுவனங்களில் தொழில்வாய்ப்பை எதிர்பார்க்கும் அனைவரும் கல்வி தகைமையுடன் தொழில் தகைமையும் பெற்றிருந்தால் மாத்திரமே, சவால்களுக்கு மத்தியில் சிறந்த இலக்கை அடைய முடியும் என இதன்போது ஆளுநர் தெரிவித்தார்.
மனைபொருளியல் டிப்ளோமா சான்றிதழ் பயிற்சி நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த கௌரவ ஆளுநர், தொழில் தகைமையை மேலும் வளர்த்துக் கொள்வதற்கான ஆளுமையை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.